கரீபியன் பிரிமியர் லீக் தொடரின் 12ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற மூன்றாவது லீக் போட்டியில் செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் மற்றும் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற பேட்ரியாட்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய நைட் ரைடர்ஸ் அணியில் தொடக்க வீரர் சுனில் நரைன் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி 3 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 38 ரன்களில் விக்கெட்டை இழக்க, மற்றொரு தொடக்க வீரரான ஜேசன் ராய் 6 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர்.

Advertisement

பின்னர் இணைந்த நிக்கோலஸ் பூரன் - கேசி கார்டி இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து இருவரும் இணைந்த பவுண்டரி மழையை பொழிந்ததுடன் 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். பின்னர் இப்போட்டியில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிக்கோலஸ் பூரன் 7 பவுண்டரி, 9 சிக்ஸர்கள் என 97 ரன்களைக் குவித்த நிலையில் விக்கெட்டை இழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அதேசமயம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேசி கார்டி 9 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 73 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கை கொடுத்தனர். 

Advertisement

இதன்மூலம், டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 250 ரன்களைச் சேர்த்து அசத்தியது. பேட்ரியாட்ஸ் அணி தரப்பில் ஆன்ரிச் நோர்ட்ஜே 2 விக்கெட்டுகளையும், ரியான் ஜான், தப்ரைஸ் ஷம்ஸி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையடைய பேட்ரியாட்ஸ் அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அந்த அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான ஆண்ட்ரே ஃபிளெட்சர் ரன்கள் ஏதுமின்றியும், கைல் மேயர்ஸ் 6 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 

பின்னர் இணைந்த எவின் லூயிஸ் - மைக்கெல் லூயிஸ் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய மைக்கேல் லூயிஸ் அரைசதம் கடந்து அசத்தினார். அதேசமயம் மறுபக்கம் எவின் லூயிஸ் 39 ரன்களில் விக்கெட்டை இழக்க, 56 ரன்களை எடுத்த நிலையில் மைக்கேல் லூயிசும் தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். இதனையடுத்து களமிறங்கிய வீரர்களில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 39 ரன்களுக்கும், ரியான் ஜான் 25 ரன்களையும் சேர்த்ததைத் தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். 

இதன் காரணமாக பேட்ரியாட்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்களை மட்டுமே சேர்த்தது. நைட் ரைடர்ஸ் அணி தரப்பில் ஜோஷுவா லிட்டில், சுனில் நரைன், வக்கார் சலாம்கெயில் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன்மூலம் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியானது 44 ரன்கள் வித்தியாசத்தில் செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணியை வீழ்த்தி இத்தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News