சிபிஎல் 2024: ராயல்ஸை வீழ்த்தி நைட் ரைடர்ஸ் அபார வெற்றி!

Updated: Sat, Sep 28 2024 10:07 IST
Image Source: Google

கரீபியன் பிரிமியர் லீக் டி20 தொடரின் 12ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 28அவது லீக் போட்டியில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் மற்றும் பார்படாஸ் ரயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற ராயல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

அதன்படி களமிறங்கிய நைட் ரைடர்ஸ் அணிக்கு தொடக்கம் சிறப்பானதாக அமையவில்லை. அணியின் தொடக்க வீரர்கள் ஜேசன் ராய் ரன்கள் ஏதுமின்றியும், பேரிஸ் 5 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர். பின்னர் இணைந்த நிக்கோலஸ் பூரன் - கேசி கார்டி இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் நிக்கோலஸ் பூரன் 27 ரன்களில் ஆட்டமிழக்க, மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கேசி கார்டி 32 ரன்களுடன் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார். 

பின்னர் இணைந்த கேப்டன் கீரன் பொல்லார்ட் மற்றும் ஆண்ட்ரே ரஸல் இணையும் அதிரடியாக விளையாடி சிக்ஸர் மழை பொழிந்தனர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பொல்லார்ட் 4 சிக்ஸர்கள் என 42 ரன்களையும், ஆண்ட்ரே ரஸல் ஒரு பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 31 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழந்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியானது 7 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்களைச் சேர்த்தது. பார்படாஸ் ராயல்ஸ் அணி தரப்பில் மஹீஷ் தீக்ஷனா மற்றும் நவீன் உல் ஹக் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய பார்படாஸ் ராயல்ஸ் அணியிலும் தொடக்க வீரர்கள் குயின்டன் டி காக் 8 ரன்களிலும், காதீம் அலீன் 2 ரன்களிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் இணைந்த கெவின் விக்ஹாம் - அலிக் அதனாஸ் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் கெவின் விக்ஹாம் 23 ரன்களில் ஆட்டமிழக்க, அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட அலிக் அதானாஸ் ஒரு பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 44 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பையும் தவறவிட்டார். 

Also Read: Funding To Save Test Cricket

இதனைத்தொடர்ந்து களமிறங்கிய டேவிட் மில்லரும் தனது பங்கெற்கு 2 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 30 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழக்க, ஜேசன் ஹோல்டர் 4 ரன்களுடன் நடையைக் கட்டினார். பின்னர் அணியின் நம்பிக்கையாக இருந்த ரோவ்மன் பாவெலும் 18 ரன்களில் நடையை கட்ட மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்களை மட்டுமே எடுத்தது. நைட் ரைடர்ஸ் அணி தரப்பில் அகீல் ஹொசைன், கிறிஸ் ஜோர்டன் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன்மூலம் நைட் ரைடர்ஸ் அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் ராயல்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை