ஐசிசி மாதாந்திர விருதுகள்: ஜூன் மாதத்திற்கான பட்டியளில் ஹெட், வில்லியம்ஸ், ஹசரங்கா தேர்வு!
ஐசிசி மாதம் தோறும் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளை வைத்து அதில் சிறந்து செயல்பட்ட வீரர்கள் யார் என்று மாதந்தோறும் அறிவிக்கிறது. இந்த வகையில் ஜூன் மாதம் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி மற்றும் ஆஷஸ் தொடர் ஆகியவை இருந்தது.
மேலும் உலகக்கோப்பை தகுதிச்சுற்றுக்கான தொடரும் ஜிம்பாப்வேவில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் ஜூன் மாதத்திற்கான பரிந்துரை பட்டியலில் மூன்று வீரர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள். இப்பட்டியளில் ஆஸ்திரேலிய அணியின் டிராவிஸ் ஹெட் இடம்பிடித்துள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் சதம் அடித்து அசத்திய ட்ராவிஸ் ஹெட், ஆசஸ் தொடரிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்து வருகிறார்.
இந்த பட்டியலில் அடுத்த இடத்தை ஜிம்பாப்வே வீரர் சீன் வில்லியம்ஸ் பெற்று இருக்கிறார். இவர் நேபாள், அமெரிக்கா மற்றும் ஓமன் ஆகிய அணிகளுக்கு எதிராக சதங்களை அடித்திருக்கிறார். உலகக் கோப்பை தகுதி சுற்றில் 100 ரன்களுக்கு மேல் பேட்டிங் சராசரி வைத்திருக்கும் சீன் வில்லியம்ஸ் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இந்த தொடரில் அவர் 700 ரன்கள் விளாசி இருக்கிறார்.
இந்த பட்டியலில் இலங்கை அணியின் நட்சத்திர வீரர் வநிந்து ஹசரங்காவும் இடம்பிடித்துள்ளார். ஜிம்பாப்வேவில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை தகுதி சுற்றில் 20 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இதன் மூலம் இந்த தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தொடர்ந்து மூன்று போட்டிகளில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி ஹசரங்கா அசத்திருக்கிறார். இதன் மூலம் பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் வக்கார் யூனிஸ்க்கு பிறகு இந்த சாதனையை நிகழ்த்தியவர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார்.