சாம்பியன்ஸ் கோப்பை 2025: சதமடித்து அசத்திய ‘கிங் கோலி’; பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா!
ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2025ஆம் ஆண்டு சீசனானது பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற குரூப் ஏ அணிகளுக்கு இடையேயான லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகள் மோதின.
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு பாபர் ஆசாம் - இமாம் உல் ஹக் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 41 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், 5 பவுண்டரிகளுடன் 23 ரன்களைச் சேர்த்திருந்த பாபர் ஆசாம் தனது விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான இமாம் உல் ஹக்கும் 10 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ரன் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார்.
அதன்பின் ஜோடி சேர்ந்த சௌத் ஷகீல் மற்றும் கேப்டன் முகமது ரிஸ்வான் இணை பொறுப்புடன் விளையாடி அணியின் விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தியதுடன், தேவைப்படும் நேரங்களில் பவுண்டரிகளையும் அடித்து அணியின் ஸ்கோரை சீரான வேகத்தில் உயர்த்தினர். இதில் சிறப்பான ஆஅட்டத்தை வெளிப்படுத்திய சௌத் ஷகீல் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். மேற்கொண்டு இருவரும் இணைந்து மூன்றாவது விக்கெட்டிற்கு 104 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் அரைசதத்தை நெருங்கிய முகமது ரிஸ்வான் 46 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
அவரைத்தொடர்ந்து அரைசதம் கடந்து விளையாடி வந்த சௌத் ஷகீலும் 62 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் களமிறங்கிய தயாப் தாஹீர் 4 ரன்களிலும், அதிரடியாக விளையாட முயற்சித்த சல்மான் ஆகா 19 ரன்னிலும், ஷாஹீன் அஃப்ரிடி முதல் பந்திலேயும், நஷீம் ஷா 14 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய ஹாரிஸ் ராவுஃப் தனது பங்கிற்கு ஒரு சிக்ஸரை பறக்கவிட்ட கையோடு 8 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.
இறுதியில் 38 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் குஷ்தில் ஷாவும் தனது விக்கெட்டை இழக்க, பாகிஸ்தான் அணி 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 241 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனையடுத்து 242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மன் கில் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர்.
இதில் அதிரடியாக தொடங்கிய ரோஹித் சர்மா 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 20 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த ஷுப்மன் கில் மற்றும் விராட் கோலி இணை நிதானமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரும் இணைந்து மூன்றாவது விக்கெட்டிற்கு 69 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், அரைசதத்தை நெருங்கிய ஷுப்மன் கில் 46 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் விராட் கோலியுடன் இணைந்த ஸ்ரேயாஸ் ஐயரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது.
இதில் இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் தங்கள் அரைசதங்களையும் பதிவுசெய்து அசத்தினர். மேற்கொண்டு இருவரும் இணைந்து மூன்றாவது விக்கெட்டிற்கு 114 ரன்களைச் சேர்த்து அணியின் வெற்றியை உறுதிசெய்தனர். அதன்பின் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 56 ரன்களைச் சேர்த்த கையோடு ஸ்ரேயாஸ் ஐயர் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஹர்திக் பாண்டியாவும் 8 ரன்களுடன் நடையைக் கட்டினார். இருப்பினும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 51ஆவது சதத்தைப் பதிவுசெய்து அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார்.
Also Read: Funding To Save Test Cricket
இதன்மூலம் இந்திய அணி 42.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி நடப்பு ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரியில் அரையிறுதி வாய்ப்பையும் உறுதிசெய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த விராட் கோலி 7 பவுண்டரிகளுடன் 100 ரன்களைச் சேர்த்ததன் மூலம் ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.