CWC 2023 Qualifiers: வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி ஜிம்பாப்வே அசத்தல் வெற்றி!

Updated: Sat, Jun 24 2023 21:17 IST
CWC 2023 Qualifiers: Zimbabwe are superb in a famous win over West Indies and their World Cup dream (Image Source: Google)

ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான  தகுதிச்சுற்று போட்டிகள் ஜிம்பாப்வேவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 13ஆவது லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் - ஜிம்பாப்வே அணிகள் பலப்பரீட்சை நடத்தின.  

இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய ஜிம்பாப்வே அணிக்கு கும்பி மற்றும் கேப்டன் கிரெக் எர்வின் இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்துக்கொடுத்தனர். இதில் கும்பி 26 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த வெஸ்லி மதேவெரே 2 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். 

இவர்களைத் தொடர்ந்து அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் கிரேக் எர்வின் 47 ரன்களிலும், சீன் வில்லியம்ஸ் 23 ரன்களுக்கும் ஆட்டமிழக்க ஜிம்பாப்வே அணி 114 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் ஜோடி சேர்ந்த சிக்கந்தர் ரஸா - ரியான் பர்ல் இணை அதிரடியான விளையாடி அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர். தொடர்ந்து அதிரடியாக செயல்பட்ட இருவரும் அரைசதம் கடந்ததும் அசத்தினர். 

பின்  அரைசதம் கடந்த அடுத்த பந்திலேயே ரியான் பர்ல் விக்கெட்டை இழக்க, பின்னர் வந்த சிலிவ், மஸகட்சா, நகவரா ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். பின் 6 பவுண்டரி, 2 சிக்சர்களை விளாசி 68 ரன்களை எடுத்திருந்த சிக்கந்தர் ரஸாவும் அடிக்க முயன்று ஆட்டமிழந்தார். இறுதியில் ஜிம்பாப்வே அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 268 ரன்களைச் சேர்த்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் கீமோ பால் 3 விக்கெட்டுகளையும், அல்ஸாரி ஜோசப், அகீல் ஹொசைன் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பிராண்டன் கிங் - கைல் மேயர்ஸ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் பிராண்டன் கிங் 20 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ஜான்சன் சார்லஸும் ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். 

அதேசமயம் மறுமுனையில் அரைசதம் கடந்திருந்த கைல் மேயர்ஸ் 56 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த ஷாய் ஹோப் - நிக்கோலஸ் பூரன் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். இதில் ஹோப் 30 ரன்களுக்கும், நிக்கோலஸ் பூரன் 34 ரன்களுக்கும் என ஆட்டமிழந்தனர். 

அதன்பின் ரோஸ்டன் சேஸ் 44 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டது. இதையடுத்து களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, 44.4 ஓவர்களில்  அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 233 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஜிம்பாப்வே தரப்பில் டெண்டாய் சதாரா 3 விக்கெட்டுகளையும், சிக்கந்தர் ரஸா, பிளசிங் முசரபாணி, ரிச்சர்ட் நக்வரா தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

இதன்மூலம் ஜிம்பாப்வே அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. இப்போட்டியில் பேட்டிங், பந்துவீச்சு என கலக்கிய சிக்கந்தர் ரஸா ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை