ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை லீக் இரண்டு 2023-27 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 21ஆவது லீக் போட்டியில் நெதர்லாந்து மற்றும் அமெரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற அமெரிக்க அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதனையடுத்து களமிறங்கிய நெதர்லாந்து அணியில் தொடக்க வீரர் மைக்கேல் லெவிட் 10 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த மேக்ஸ் ஓடவுட் மற்றும் விக்ரம்ஜித் சிங் இணை இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.

Advertisement

இதில் அரைசதத்தை நெருங்கிய மேக்ஸ் ஓடவுட் 49 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விக்ரம்ஜித் சிங் அரைசதம் கடந்து அசத்தினார். பின்னர் 59 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்ரம்ஜித் சிங்கும், 6 ரன்கள் எடுத்திருந்த நிலையில் வெஸ்லி பரேஸியும் விக்கெட்டை இழந்தனர். பின்னர் களமிறங்கிய கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் ஒருபக்கம் அபாரமாக விளையாடி ரன்களைச் சேர்த்த நிலையில், மறுமுனையில் விளையாடிய நோஹா கிராஸ் 4 ரன்களிலும், ஷரிஸ் அஹ்மத் 16 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர். 

Advertisement

அதேசமயம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் கடைசி பந்துவரை களத்தில் இருந்த ஸ்காட் எட்வர்ட்ஸ் அரைசதம் கடந்து அசத்தியதுடன், 65 ரன்களைச் சேர்த்து அசத்தினார். இதன்மூலம் நெதர்லாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 237 ரன்களைச் சேர்த்தனர். அமெரிக்க அணி தரப்பில் மிலிந்த் குமார் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய அமெரிக்க அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அந்த அணியின் நட்சத்திர வீரர்கள் ஸ்டீவன் டெய்லர் மற்றும் கேப்டன் மொனாங்க் படேல் ஆகியோர் அடுத்தடுத்து ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தனர். 

பின்னர் இணைந்த ஸ்மித் படேல் - ஆரோன் ஜோன்ஸ் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணியின் ஸ்கோரையும் சீரான வேகத்தில் உயர்த்தினர். இருவரும் இணைந்து மூன்றாவது விக்கெட்டிற்கு 85 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் ஸ்மித் படேல் 38 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அரைசதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஆரோன் ஜோன்ஸ் 47 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் களமிறங்கிய மிலிந்த் குமார் அபாரமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினார். 

அதேசமயம் மறுமுனையில் களமிறங்கிய ஷயான் ஜஹாங்கீர் 20 ரன்களில் ஆட்டமிழக்க, அரைசதம் கடந்து அசத்திய மிலிந்த் குமாரும் 69 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். இதனையடுத்து களமிறங்கிய வீரர்களாலும் ரன்களைச் சேர்க்க முடியாத காரணத்தால் 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 218 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நெதர்லாந்து தரப்பில் விவியன் கிங்மா 3 விக்கெட்டுகளையும், ஆர்யன் தத், பால் வான் மீகெரன், ஷரிஸ் அஹ்மத் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன்மூலம் நெதர்லாந்து அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் அமெரிக்க அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News