டேவிட் வார்னர் ஓய்வை அறிவித்திருக்கலாம் - ரிக்கி பாண்டிங்!

Updated: Mon, Mar 06 2023 10:54 IST
David Warner Should Have Retired From Tests Was After The Match In Sydney: Ricky Ponting (Image Source: Google)

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் ஆஸ்திரேலியா முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த தோல்விகளை பெற்றாலும், இந்தூரில் நடைபெற்ற 3ஆவது போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையில் அதிரடியான வெற்றி பெற்றது. அதனால் தங்களது நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ள ஆஸ்திரேலியா 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு அதிகாரப்பூர்வமாக முதல் அணியாக தகுதி பெற்றுள்ளது. 

முன்னதாக ஆஸ்திரேலியாவின் நம்பிக்கை நட்சத்திர தொடக்க வீரர் டேவிட் வார்னர் 2ஆவது போட்டியில் காயமடைந்து வெளியேறியது 3வது போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சமீப காலங்களில் தடுமாறி வரும் அவர் 1, 10, 15 என இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளில் சுமாராக செயல்பட்டதால் 3வது போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எந்த பின்னடைவையும் ஏற்படுத்தவில்லை. மாறாக 9 விக்கெட் வித்தியாசத்தில் மகத்தான வெற்றி கிடைத்தது. 

கடந்த 2011ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான டேவிட் வார்னர் ஆரம்ப காலங்களில் அதிரடியாக பேட்டிங் செய்து விரைவாக ரன்களைக் குவித்து ஆஸ்திரேலியாவின் நிரந்தர தொடக்க வீரராக உருவெடுத்தார். அந்த வகையில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்த அவர் 2019க்குப்பின் வயது காரணமாக ஃபார்மை இழந்து தடுமாறினார். குறிப்பாக 2019 ஆஷஸ் தொடரில் வெறும் 9.5 என்ற படுமோசமான பேட்டிங் சராசரியில் ரன்களை எடுத்தது போல சுமாராக செயல்பட்டு வந்ததால் நிறைய விமர்சனங்களை சந்தித்த டேவிட் வார்னர் அதை சமீபத்தில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் உடைத்தார்.

அதிலும் குறிப்பாக தன்னுடைய 100ஆவது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதமடித்த முதல் ஆஸ்திரேலிய வீரராக வரலாறு படைத்த அவர் மீண்டும் ஜொலிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எதிர்பார்க்கப்பட்டதை விட சுமாராகவே செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் 36 வயதாகும் டேவிட் வார்னர் ஆஸ்திரேலியா அணியின் வருங்காலத்தை கருத்தில் கொண்டு இந்நேரம் ஓய்வு பெற்றிருக்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் அதிரடியாக பேசியுள்ளார்.

இதுகுறித்து பேசிய ரிக்கி பாண்டிங், “தற்போதைய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆஷஸ் தொடருக்கு முன்பாக முடிய உள்ளது. அனைத்தும் நன்றாக செல்லும் பட்சத்தில் அந்த ஆஷஸ் தொடரின் கடைசி போட்டி வரை டேவிட் வார்னரை விளையாட வைக்க அவர்கள் விரும்புவார்கள் என்று நினைக்கிறேன். இருப்பினும் அந்த முடிவு அவருடையதாகும். ஆனால் ஒரு பேட்ஸ்மேனாக இருக்கும் நீங்கள் ரன்களை அடிக்கவில்லை என்றால் நீங்களாகவே உங்களது இடத்தை காலி செய்ய வேண்டும்.

அது போன்ற நிலைமைகள் என்னை போன்றவர்களுக்கும் நடந்துள்ளது. குறிப்பாக இந்த வயதில் உங்களுடைய ஃபார்ம் குறையும் போது உங்களுக்கு எதிராக கூரான கத்திகள் பட்டை தீட்டப்படும். அதில் நீண்ட காலம் தப்பிக்க முடியாது. என்னை கேட்டால் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சிட்னியில் நடைபெற்ற போட்டியுடன் அவர் விடை பெற்றிருக்க வேண்டும். ஏனெனில் மெல்போர்னில் அவர் தன்னுடைய 100ஆவது போட்டியில் இரட்டை சதமடித்தார்.

எனவே தனது சொந்த ஊரான சிட்னியில் விளையாடிய 101ஆவது போட்டியில் சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் சிறப்பாக கேரியரை பினிஷிங்  செய்திருக்கலாம். ஆனால் இப்போது இந்த வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் பாதியில் நீக்கப்பட்டுள்ளதால் அவருடைய கேரியர் முடிவதற்கு அதிக வாய்ப்புள்ளது. இந்த வகையில் அவருடைய கேரியர் முடிந்தால் அது சிறப்பாக இருக்காது. இருப்பினும் போராடும் தன்மை கொண்ட அவருடைய கேரியர் எந்தளவுக்கு செல்கிறது என்பதை பார்ப்போம்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை