உலகக்கோப்பை தோல்விக்கு நிச்சயம் பதிலடி கொடுப்பேன் - ஷுப்மன் கில்!

Updated: Wed, Dec 06 2023 13:41 IST
உலகக்கோப்பை தோல்விக்கு நிச்சயம் பதிலடி கொடுப்பேன் - ஷுப்மன் கில்! (Image Source: Google)

சர்வதேச கிரிக்கெட்டில் நடப்பு 2023ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு மறக்க முடியாத அடிகளை ஆஸ்திரேலியா கொடுத்தது. ஏனெனில் பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் தோல்வியை சந்தித்தாலும் லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியாவை தோற்கடித்த பட் கமின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா உலகின் புதிய டெஸ்ட் சாம்பியனாக சாதனை படைத்தது.

அதை விட சொந்த மண்ணில் நடைபெற்ற 2023 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை அஹ்மதாபாத் நகரில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் 1 லட்சம் ரசிகர்கள் முன்னிலையில் 240 ரன்களுக்கு சுருட்டிய ஆஸ்திரேலியா 6ஆவது முறையாக கோப்பையை வென்று உலகின் புதிய சாம்பியனாக சாதனை படைத்தது.

அந்த வகையில் 2003 உலகக் கோப்பை போலவே மீண்டும் மறக்க முடியாத தோல்வியை பரிசளித்த ஆஸ்திரேலியா கோடிக்கணக்கான இந்திய ரசிகர்களின் நெஞ்சங்களை உடைத்தது. இந்நிலையில் உலகக் கோப்பையில் சந்தித்த தோல்விக்கு 2024 டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுப்பேன் என்று நம்புவதாக இந்திய வீரர் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.

அத்துடன் 2024 இறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தன்னுடைய சொந்த மண்ணில் வரலாற்று சிறப்புமிக்க பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடங்குகிறது. அந்தத் தொடரிலும் சிறப்பாக விளையாடி ஆஸ்திரேலியாவை தோற்கடிக்க முயற்சிப்பேன் என்று நம்பிக்கை தெரிவிக்கும் அவர் அடுத்ததாக நடைபெறும் தென் ஆப்பிரிக்க தொடரிலும் அசத்துவதற்கு தயாராக இருப்பதாக கூறியுள்ளார். 

இதுகுறித்து சமீபத்திய பேட்டியில் பேசிய அவர், “இந்த வருடம் எனக்கு சிறப்பாக அமைந்தாலும் உலகக் கோப்பையை தவற விட்டது உற்சாகமான மனநிலையை தணித்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக அடுத்த வருடம் நமக்கு மற்றுமொரு உலகக் கோப்பை வரவேற்கிறது. எனவே நாங்கள் அனைவரும் அதை எதிர்நோக்குகிறோம். அடுத்த ஒரு வருடத்தில் டி20 உலகக் கோப்பை வருகிறது. அதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் தொடர் வருகிறது.

அதற்கு முன்பாக தென் ஆப்பிரிக்க தொடரும் நடைபெற உள்ளது. எனவே அனைத்தும் இத்தோடு முடிந்து விடவில்லை. குறிப்பாக ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்கள் எங்களுக்கு மிகவும் பெரியது. எனவே அந்த தொடர்களுக்காக நான் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறேன். ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக கேப்டனாக செயல்பட உள்ளது ஆர்வமான சவாலாக இருக்கும். அதில் நிறைய முன்னேற்றங்களையும் அனுபவங்களையும் கற்றுக் கொள்ள வேண்டும். அது எனக்கு அடுத்த வருடம் உதவி செய்யும் என்று நம்புகிறேன்” என கூறியுள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை