விராட் கோலி ஓப்பனிங்கில் களமிறங்கினால் மிகச் சிறப்பாக இருக்கும் - ஆகாஷ் சோப்ரா!

Updated: Thu, Jan 11 2024 14:09 IST
விராட் கோலி ஓப்பனிங்கில் களமிறங்கினால் மிகச் சிறப்பாக இருக்கும் - ஆகாஷ் சோப்ரா! (Image Source: Google)

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி நட்சத்திர வீரரான விராட் கோலி கடந்த 2022ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியில் விளையாடியதை தொடர்ந்து கடந்த 14 மாதங்களாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக விளையாடாமல் இருந்து வந்தார். இந்நிலையில் எதிர்வரும் ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்க நாடுகளில் நடைபெறயிருக்கும் டி20 உலக கோப்பை தொடரில் விளையாட வேண்டும் என்று விருப்பத்தை தெரிவித்திருந்தார்.

இதன் காரணமாக அவருக்கு ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இப்படி பல மாதங்கள் கழித்து மீண்டும் இந்திய டி20 அணிக்கு திரும்பிய விராட் கோலி ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் போட்டியில் விளையாட மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ள வேளையில் எஞ்சிய இரண்டு போட்டிகளில் விளையாடுவார் என்று தெரிகிறது.

அதோடு இந்த தொடரிலும், எதிர்வரும் ஐபிஎல் தொடரிலும் அவரது செயல்பாடு எவ்வாறு இருக்கிறது என்பதை பொறுத்தே அவருக்கு டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்குமா? கிடைக்காதா? என்பது தெரியவரும் என்று பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் விராட் கோலி டி20 கிரிக்கெட்டில் எந்த பேட்டிங் ஆர்டரில் இறங்கினால் சரியாக இருக்கும் என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “விராட் கோலி நிச்சயம் இந்திய டி20 கிரிக்கெட் அணியில் விளையாட தகுதியான ஒரு வீரர் தான். ஆனாலும் என்னை பொறுத்தவரை அவர் டி20 கிரிக்கெட்டில் ஓப்பனிங்கில் களமிறங்கினால் மிகச் சிறப்பாக இருக்கும். ஏனெனில் டி20 கிரிக்கெட்டை பொறுத்தவரை பவர்பிளேவில் விராட் கோலி மிகச் சிறப்பாக விளையாடக்கூடியவர். ஒருவேளை அவர் பவர்பிளேவை கடந்து விட்டால் பின்னர் வெகு எளிதாக ரன்களை குவிக்கும் ஒரு ஆபத்தான வீரராகவும் அவர் இருப்பார். 

எனவே டி20 கிரிக்கெட்டில் அவருக்கு துவக்க வீரருக்கான வாய்ப்பினை வழங்க வேண்டும். இல்லையெனில் அவர் மூன்றாவது இடத்தில் களமிறங்கும் பட்சத்தில் மிடில் ஓவர்களில் சுழற்பந்து வீச்சாளர்கள் வருவதனால் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் குறைகிறது. இருந்தாலும் தற்போதைய இந்திய அணியில் ரோகித் சர்மாவுடன் சுப்மன் கில்லோ அல்லது யாஷஸ்வி ஜெய்ஸ்வாலோ இருவரில் ஒருவர் தான் களமிறங்குவார்கள் என்பதனால் அவர் மூன்றாவது இடத்தில் தான் விளையாட வாய்ப்பு இருப்பதாக நான் பார்க்கிறேன்” என கூறியுள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை