துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசனானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நேற்று முந்தினம் தொடங்கிய இரண்டாவது லீக் போட்டியில் இந்தியா சி மற்றும் இந்தியா டி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா சி அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய இந்தியா டி அணியானது தொடக்கம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அக்ஸர் படேல் அரைசதம் கடந்ததுடன் 86 ரன்களைச் சேர்த்திருந்தார்.

Advertisement

இதன்மூலம் இந்தியா டி அணியானது முதல் இன்னிங்ஸில் 164 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்தியா சி அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 5 ரன்களிலும், சாய் சுதர்ஷன் 7 ரன்களிலும், ஆர்யன் ஜூரெல், ராஜத் பட்டிதார் என அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் அந்த அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 91 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

Advertisement

இதையடுத்து நடைபெற்ற இரண்டாம் நாள் ஆட்டத்தை பாபா இந்திரஜித் - அபிஷேக் போரல் ஆகியோர் தொடர்ந்தனர். இதில் சிறப்பாக விளையாடிய இந்திரஜித் தனது அரைசதத்தைப் பதிவுசெய்த நிலையில் 72 ரன்களிலும், அபிஷேக் போரல் 34 ரன்களிலும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இதனால் இந்தியா சி அணியும் 168 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. பின்னர் 4 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாம் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்தியா டி அணியில்  அதர்வா டைடே, யாஷ் தூபே ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர்.

பின்னர் இணைந்த ஸ்ரேயாஸ் ஐயர் - தேவ்தத் படிக்கல் இணை பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இருவரும் தங்கள் அரைசதங்களைப் பதிவுசெய்தன்ர். பின்னர் 54 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்ரேயாஸ் ஐயரும், 56 ரன்களில் தேவ்தத் படிக்கலும் என விக்கெட்டை இழந்தனர். அவர்களைத் தொடர்ந்து நிதானமாக விளையாடிய ரிக்கி புய் 44 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழக்க, பின்னர் களமிறங்கிய ஸ்ரீகர் பரத், சர்ன்ஷ் ஜைன், அர்ஷ்தீப் சிங் ஆகியோரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 

இதனால் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா டி அணியானது 8 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்நிலையில் இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தில் இந்தியா டி அணி தரப்பில் அக்ஸர் படேல் 11 ரன்களுடனும், ஹர்ஷித் ரானா 2 ரன்களுடனும் தொடர்ந்தனர். இதில் அக்ஸர் படேல் 28 ரனிலும், அடுத்து களமிறங்கிய ஆதித்யா ரன்கள் ஏதுமின்றியும் என விக்கெட்டை இழந்தனர்.  இதன் காரணமாக இந்தியா டி அணி இரண்டாவது இன்னிங்ஸில் 236 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்தியா சி அணி தரப்பில் மனவ் சுதர் 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

இதன்மூலம் இந்தியா சி அணிக்கு 233 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய இந்தியா சி அணியில் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 46 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார்.  அதன்பின் ஆர்யன் ஜூயல் 47 ரன்களையும், ராஜத் பட்டிதார் 44 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழக்க, இறுதிவரை ஆட்டமிழ்ழக்காமல் இருந்த அபிஷேக் போரல் 35 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார். இதன்மூலம் இந்தியா சி அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா டி அணியை வீழ்த்தி தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது. இப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய மனவ் சுதர் ஆட்டநாயகனாக தேர்வுசெய்யப்பட்டார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News