நியூசிலாந்துடனான எனது கடைசி நாள் - டிரென்ட் போல்ட் கருத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி!
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற 39ஆவது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து மற்றும் பப்புவா நியூ கினி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டிரினிடாட்டில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய பப்புவா நியூ கினி அணியானது தொடக்கம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அதிலும் குறிப்பாக அந்த அணியில் சார்லஸ் அமினி 17 ரன்களையும், செசே பாவ் 12 ரன்களையும், நோர்மன் வனுவா 14 ரன்களையும் சேர்த்ததைத் தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து ஒற்றை இலக்க ரன்களுக்கு விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். இதனால் பப்புவா நியூ கினி அணியானது 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 78 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
நியூசிலாந்து அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய லோக்கி ஃபெர்குசன் 3 விக்கெட்டுகளையும், டிரென்ட் போல்ட், டிம் சௌதீ மற்றும் இஷ் சோதி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். இதனையடுத்து 79 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணியில் ஃபின் ஆலன், ரச்சின் ரவீந்திர ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர்.
அதன்பின் டெவான் கான்வே 36 ரன்களையும், கேன் வில்லியம்சன் 18 ரன்களையும், டேரில் மிட்செல் 19 ரன்களையும் என சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் நியூசிலாந்து அணியானது 12.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் பப்புவா நியூ கினி அணியை வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பதிவுசெய்தது. இந்நிலையில், இப்போட்டியின் முடிவுக்கு பின் நியூசிலாந்து அணிக்காக இதுதான் தன்னுடைய கடைசி நாள் என்று டிரெண்ட் போல்ட் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “இது கொஞ்சம் வித்தியாசமாக உணர்வை தருகிறது. கடந்த சில நாள்களாகவே நான் இதுகுறித்து யோசித்து வருகிறேன். இதற்கு மேல் நான் அதிகம் யோசிக்கவில்லை, இப்போது எந்த கருத்தையும் சொல்ல முடியாத நிலையில் இருக்கிறேன். அதேசமயம் கடைசியாக ஒரு முறை களத்தில் விளையாடியதை ரசித்தேன். ஏனெனில் இனிமேலும் அணியில் இருக்க மாட்டேன் என்ற தைரியம் உள்ளது, ஆனால் நியூசிலாந்திற்காக நான் செய்ததைப் பற்றி நான் மிகவும் பெருமைப்படுகிறேன். மேலும் இது நியூசிலாந்துடனான எனது கடைசி நாள் என்பது வருத்தமளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக நியூசிலாந்து அணி நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் லீக் சுற்றுடன் வெளியேறியதையடுத்து, இதுவே தன்னுடைய கடைசி டி20 உலகக்கோப்பை தொடர் என்று அறிவித்திருந்த டிரென்ட் போல்ட், நேற்றைய போட்டிகு பின் இதுதான் நியூசிலாந்துடனான எனது கடைசி நாள் என்று கூறியுள்ளது ரசிகர்களை குழப்பமடைய செய்துள்ளது. ஏனெனில் அவர் அடுத்த டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாடவில்லை என்றாலும், இன்னும் சில காலம் நியூசிலாந்திற்காக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பொல்ட்டின் இந்த கருத்து அவர் ஒட்டுமொத்தமாக ஓய்வை அறிவித்து விட்டாரா என்று எண்ண தோன்றுகிறது.