IND vs AUS: இந்திய அணியின் பயிற்சி குறித்து விளக்கமளித்த ராகுல் டிராவிட்!

Updated: Sun, Feb 05 2023 22:25 IST
Emphasis On Fielding, Close-in Catching As They Could Be Really Important In The Series: Rahul Dravi (Image Source: Google)

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு தயாராகும் வகையில் இந்திய அணி நாக்பூரில் பயிற்சி முகாமில் பங்கேற்று இருக்கிறது. இதில் இந்திய அணி பேட்டிங், பந்துவீச்சு மட்டுமல்லாமல் பல்வேறு விவகாரங்களில் கவனம் செலுத்தி வருகிறது.

பார்டர் கவாஸ்கர் கோப்பையை கடைசியாக மூன்று முறை இந்திய அணி வென்று அசத்தி இருக்கிறது. இந்த நிலையில் நான்காவது முறை கோப்பையை வென்றால் இருதரப்பு டெஸ்ட் தொடரில் தொடர்ந்து நான்கு முறை வென்ற ஒரே அணி என்ற பெருமையை இந்தியா படைக்கும். மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் தகுதி பெற இந்திய அணிக்கு இன்னும் மூன்று வெற்றிகள் தேவைப்படுகிறது. இதனால் இந்த டெஸ்ட் போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய பயிற்சியாளர் ராகுல் டிராவிட், “ வீரர்கள் அனைவரும் நல்ல உடல் தகுதியுடன் இருக்கிறார்கள். நீண்ட நாட்களுக்கு பிறகு டெஸ்ட் அணியை ஒருங்கிணைத்து பார்க்கிறேன். ஏனென்றால் நிறைய வெள்ளை நிற கிரிக்கெட்டை தான் நாங்கள் கடைசியாக விளையாடினோம். சில வீரர்கள் தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு திரும்புகிறார்கள். அதற்கு தனி பயிற்சி செய்ய வேண்டியது கட்டாயம்.

டெஸ்ட் தொடருக்கு முன்பு இது போன்று பயிற்சி முகாமில் பங்கேற்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள ஆடுகளமும் திருப்திகரமாக இருக்கிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றி பெற வேண்டும் என்றால் பில்டிங் மிகவும் முக்கியம். பேட்ஸ்மேன்களுக்கு அருகில் இருக்கும் பில்டர்கள் கேட்ச் பிடிப்பதில் தான் வெற்றி வாய்ப்பு இருக்கிறது. அதுதான் இந்த தொடரை தீர்மானிக்கும் என நான் நினைக்கிறேன்.

இதனால் இந்திய அணியின் ஸ்லிப் பில்டிங் குறித்து நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். எங்களுடைய பயிற்சியாளர்கள் வீரர்களுக்கு தனி கேட்சிங் பிராக்டிஸ் கொடுத்து வருகிறார்கள். நாங்கள் தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறோம். இதனால் எந்த வீரர்களிடமும் சரியாக இணைந்து பேசி பணியாற்ற கூட முடியவில்லை. ஆனால் இப்போது ஒரு வாரம் எங்களுக்கு நேரம் கிடைத்திருக்கிறது.

இதன் மூலம் வீரர்களிடம் இருக்கும் குறையை சரி செய்து எப்படி விளையாட வேண்டும் என்பது குறித்து பயிற்சி அளிக்க இந்த முகாம் சிறப்பாக இருக்கும்.இந்த தொடருக்காக நாங்கள் ஒரு மாதத்திற்கு முன்பே தயாராகி விட்டோம் .பிற்காலத்தில் இது போன்ற நீண்ட பயிற்சி முகாமை அமைக்க வேண்டும் என நான் பிசிசியிடம் கேட்டுக்கொள்கிறேன். இன்னும் அணியை குறித்து நாங்கள் முடிவு செய்யவில்லை. மூன்று நாட்கள் கழித்து அது பற்றி யோசிப்போம்” என்று ராகுல் டிராவிட் கூறியுள்ளார். 

முதல் டெஸ்ட் போட்டி வரும் ஒன்பதாம் தேதி நாக்பூரில் நடைபெறும் நிலையில், இரண்டாவது டெஸ்ட் வரும் 17ஆம் தேதி டெல்லியிலும் மார்ச் ஒன்றாம் தேதி தர்மசாலாவில் மூன்றாவது டெஸ்ட் போட்டியும் அகமதாபாத்தில் மார்ச் 9ஆம் தேதி நான்காவது டெஸ்ட் போட்டியும் நடைபெற இருக்கிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை