ENG vs IND 1st Test: மழையால் கைநழுவி போன இந்திய அணியின் வெற்றி!
இங்கிலாந்து, - இந்தியா அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் ஆட்டம் ட்ரெண்ட்பிரிட்ஜில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 183 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து, முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி 278 ரன்கள் எடுத்து 95 ரன்கள் முன்னிலைப் பெற்றது.
இதையடுத்து, ஜோ ரூட்டின் அபார சதத்தால் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 303 ரன்களுக்கு ஆட்டமிழந்து இந்தியாவின் வெற்றிக்கு 209 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
அதன்பின் இந்தியாவின் தொடக்க வீரர்களாக கே.எல். ராகுல் மற்றும் ரோஹித் சர்மா களமிறங்கினர். சிறப்பான தொடக்கத்தைத் தந்த ராகுல் 26 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய புஜாரா 3 பவுண்டரிகள் அடித்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
பின் 4ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 52 ரன்கள் எடுத்தது. ரோஹித் - புஜாரா இருவரும் தலா 12 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இந்நிலையில், 5ஆம் நாளான இன்று (ஆகஸ்ட் 8) காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வந்ததால் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் உணவு இடைவேளை எடுக்கப்பட்டு, தேநீர் இடைவேளை எடுக்கப்பட்டும் தொடர்ந்து மழை நீடித்தது. இதனால், ஆட்டம் ரத்து செய்யப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர்.
இதன்மூலம், இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் ஆட்டம் டிராவில் முடிந்துள்ளது. கடைசி நாள் ஆட்டத்தில் 9 விக்கெட்டுகள் மீதமிருக்க 157 ரன்களே தேவை என்பதால் இந்தியாவின் வெற்றி வாய்ப்பே அதிகமாக இருந்தது. ஆனால், மழையின் குறிக்கீடு இந்தியாவின் வெற்றியை தகர்த்துள்ளது.