ENG vs AUS, 5th ODI: இங்கிலாந்தை வீழ்த்தி ஒருநாள் தொடரை வென்றது ஆஸ்திரேலியா!

Updated: Sun, Sep 29 2024 23:05 IST
Image Source: Google

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆஸ்திரேலிய அணியானது தற்சமயம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் நான்கு ஒருநாள் போட்டிகளின் முடிவில் ஆஸ்திரேலிய அணி இரண்டிலும், இங்கிலாந்து அணி இரண்டு போட்டியிலும் வெற்றிபெற்று 2-2 என்ற கணக்கில் தொடரை சமன்செய்துள்ளன. 

இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரு அணிகளுக்கும் இடையேயான ஐந்தவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியானது பிரிஸ்டோலில் உள்ள கவுண்டி கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்றது. அதன்படி தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. மேலும் இப்போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் மிட்செல் மார்ஷ், மிட்செல் ஸ்டார்க் ஆகியோ நீக்கப்பட்டு மேத்யூ ஷார்ட், கூப்பர் கன்னோலி ஆகியோரும், இங்கிலாந்து அணியில் ஜோஃப்ரா ஆர்ச்சர் நீக்கப்பட்டு, ஒல்லி ஸ்டோன் சேர்க்கப்பட்டார்.

இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு பில் சால்ட் - பென் டக்கெட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் அதிரடியாக விளையாடிய நிலையில் முதல் விக்கெட்டிற்கு 58 ரன்கள் பார்ட்னஷிப்பும் அமைத்தனர். இதில் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய பில் சால்ட் 5 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 45 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய வில் ஜேக்ஸும் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் டக்கெட்டுடன் இணைந்த கேப்டன் ஹாரி புரூக்கும் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். 

தொடர்ந்து இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் தங்கள் அரைசதங்களை பதிவுசெய்தும் அசத்தினார். தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஹாரி புரூக் 3 பவுண்டரி, 7 சிக்ஸர்கள் என 72 ரன்களைக் குவித்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஜேமி ஸ்மித் 6 ரன்களுக்கும், லியாம் லிவிங்ஸ்டோன் ரன்கள் ஏதுமின்றியும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். இதற்கிடையில் தொடக்க வீரராக களமிறங்கி அபாரமாக விளையாடி வந்த பென் டக்கெட் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 2ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். 

பின்னர் 13 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 107 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பென் டக்கெட் விக்கெட்டை இழந்த நிலையில், அடுத்து களமிறங்கிய வீரர்களில் ஆதில் ரஷித் 36 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர். இதன்மூலம் இங்கிலாந்து அணியானது 49.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 309 ரன்களைச் சேர்த்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய டிராவிஸ் ஹெட் 4 விக்கெட்டுகளையும், ஆரோன் ஹார்டி, ஆடம் ஸாம்பா, கிளென் மேக்ஸ்வெல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

இதையடுத்து கடின இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணிக்கு டிராவிஸ் ஹெட் மற்றும் மேத்யூ ஷார்ட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி பவுண்டரிகளை பறக்கவிட, முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப்பாக 78 ரன்களையும் சேர்த்தனர். இதில் அரைசதம் கடப்பார் என எதிர்பார்க்கப்பட்ட டிராவிஸ் ஹெட் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 31 ரன்களை எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து அரைசதம் கடக்கும் வாய்ப்பை தவறவிட, மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய மேத்யூ ஷார்ட் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். 

அவருக்கு துணையாக ஸ்டீவ் ஸ்மித்தும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் அதிரடியாக விளையாடி வந்த மேத்யூ ஷார்ட் 7 பவுண்டரி 4 சிக்ஸர்கள் என 58 ரன்களைச் சேர்த்த நிலையில் மேத்யூ ஷார்ட் தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். இதையடுத்து ஸ்டீவ் ஸ்மித்துடன் இணைந்த ஜோஷ் இங்கிலிஸும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயரத்தொடங்கியது. இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 20.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 165 ரன்களைச் சேர்த்தது. 

Also Read: Funding To Save Test Cricket

அப்போது மழை குறுக்கிட்டதன் காரணமாக ஆட்டம் தடைபட்டது. அதன்பின்னரும் மழை தொடர்ந்த காரணத்தால், டக்வொர்த் லூயிஸ் முறைப்படி ஆஸ்திரேலிய அணியானது 49 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஆஸ்திரேலிய அணியானது 3-2 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. மேலும் இப்போட்டியில் பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் அசத்திய டிராவிஸ் ஹெட் ஆட்டநாயகன் விருதையும், தொடர் நாயகன் விருதையும் வென்று அசத்தியுள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை