விராட் கோலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ரோஹித் சர்மா!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய அணியில் சீனியர் வீரராகவும் விளையாடி வருகிறார் 33 வயதான விராட் கோலி. அனைத்து ஃபார்மெட் கிரிக்கெட்டிலும் தவறாமல் ரன் சேர்த்து அசத்தும் வல்லமை கொண்ட வீரர். இருந்தும் அண்மைக் காலமாக அவர் ரன் சேர்க்க தடுமாறி வருகிறார்.
இந்நிலையில், அவரை அணியிலிருந்து நீக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் கபில் தேவ், அஜய் ஜடேஜா மற்றும் வெங்கடேஷ் பிரசாத் போன்றவர்கள் குரல் எழுப்பியுள்ளனர்.
இந்நிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடர் முடிந்த நிலையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் எதிர்வினையாற்றி இருக்கிறார் கேப்டன் ரோகித் சர்மா..
அதில் பேசிய அவர், "எங்களுக்கு அதில் எந்த சிரமமும் இல்லை. ஏனெனில் நாங்கள் வெளியில் இருந்து எழும் சத்தங்களை கவனிப்பதில்லை. அந்த வல்லுநர்கள் யார் என்று எனக்குத் தெரியவில்லை. அவர்கள் ஏன் அப்படி அழைக்கப்படுகிறார்கள் என்பது கூட புரியவில்லை. அவர்கள் வெளியிலிருந்து அனைத்தையும் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். உள்ளே என்ன நடக்கிறது என்பது அவர்களுக்குத் தெரியாது.
நாங்கள் சிறந்தவொரு அணியை கட்டமைத்து வருகிறோம். அதற்கென எங்களுக்கு ஒரு திட்டமும், செயல்முறையும் உள்ளது. அதற்குப் பின்னால் நிறைய மெனக்கெடல் உள்ளது. எங்களுக்கு வெளியில் என்ன நடக்கிறது என்பது முக்கியம் அல்ல.
கோலி ஒரு தரமான வீரர். அவருக்கு எங்களது ஆதரவு எப்போதும் உண்டு. ஃபார்மை பொறுத்தவரையில் அனைவருக்கும் ஏற்ற இறக்கங்கள் என்பது அவரவர் கரியரில் இருக்கும். பல ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்ட வீரர் ஒருவர் வெறும் ஒன்று அல்லது இரண்டு தொடர்களில் ரன் சேர்க்க தவறினால் அவர் மோசமான வீரர் கிடையாது" என்று தெரிவித்துள்ளார்.