ENG vs IRE, 3rd ODI: மழையால் பாதித்த ஆட்டம்; தொடரை வென்றது இங்கிலாந்து!
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது போட்டி மழை காரணமாக முற்றிலுமாக கைவிடப்பட்ட நிலையில், இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று பிரிஸ்டோலில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு பிலிப் சால்ட் - வில் ஜேக்ஸ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிலிப் சால்ட் 22 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார்.
அதன்பின் 7 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 61 ரன்கள் எடுத்த நிலையில் பிலிப் சால்ட் விக்கெட்டை இழக்க, வில் ஜேக்ஸும் 39 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த ஸாக் கிரௌலி - பென் டக்கெட் இணை அபார ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மின்னல் வேகத்தில் உயர்ந்தது. இதில் அரைசதம் கடந்த ஸாக் கிரௌலி 51 ரன்களில் விக்கெட்டை இழந்தாலும், மறுமுனையில் அபாரமாக விளையாடிய பென் டக்கெட் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
இதன்மூலம் இங்கிலாந்து அணி 31 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 280 ரன்கள் எடுத்த நிலையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. அதன்பின் தொடர்ந்து மழை நீடித்த காரணத்தால் ஆட்டம் முழுவதுமாக கைவிடப்பட்டது. இதனால் இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரைக் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.