இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வந்த வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றதுடன் 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது பர்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று முடிந்துள்ளது.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில் 282 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த இங்கிலாந்து அணியானது முதல் இன்னிங்ஸில் 376 ரன்களைக் குவித்தது. பின்னர் 94 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 175 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதன்மூலம் இங்கிலாந்து அணிக்கு 82 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு கேப்டன் பென் ஸ்டோக்ஸ் - பென் டக்கெட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பென் டக்கெட் ஒருபக்கம் நிதானம் காட்டினாலும், மறுமுனையில் அதிரடியாக விளையாடிய பென் ஸ்டோக்ஸை அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பென் ஸ்டோக்ஸ் 24 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்ததுடன், அணியின் வெற்றியையும் உறுதிசெய்தார். இதன்மூலம் இங்கிலாந்து அணியானது வெறும் 7.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன் 3-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் முழுமையாக கைப்பற்றி அசத்தியுள்ளது.
இந்நிலையில் இப்போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணியாக புதிய சாதனை படைத்துள்ளார். அதன்படி இப்போட்டியில் பென் ஸ்டோக்ஸ் 24 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தியதன் மூலம், இங்கிலாந்து அணிக்காக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக அரைசதத்தை விளாசிய வீரர் எனும் புதிய சாதனையைப் படைத்து அசத்தியுள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக அரைசதம் அடித்த இங்கிலாந்து வீரர்கள்
- பென் ஸ்டோக்ஸ் - 24 பந்துகள் vs வெஸ்ட் இண்டீஸ்
- இயன் போத்தம் - 28 பந்துகள் vs இந்தியா
- ஜானி பேர்ஸ்டோவ் - 30 பந்துகள் vs நியூசிலாந்து
- பென் டக்கெட் - 32 பந்துகள் vs வெஸ்ட் இண்டீஸ்