சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்ட காத்திருக்கும் பில் சால்ட்!
ஆஸ்திரேலிய அணியானது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடவுள்ளது. இதில் நடைபெற்று வரும் டி20 தொடரின் முதலிரண்டு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், 1-1 என்ற கணக்கில் தொடரையும் சமன்செய்துள்ளன. இதையடுத்து இத்தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது நாளை மான்செஸ்டரில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் வெற்றிபெறும் அணி தொடரை கைப்பற்றும் என்பதால் இதில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் இப்போட்டியின் மூலம் பில் சால்ட் புதிய மைல் கல் ஒன்றை எட்டும் வாய்ப்பினையும் பெற்றுள்ளார். அதன்படி இந்தப் போட்டியில் பில் சால்ட் 56 ரன்கள் எடுத்தால், டி-20 சர்வதேசப் போட்டிகளில் 1000 ரன்கள் என்ற மைல் கல்லை எட்டுவார். அதுமட்டுமின்றி இங்கிலாந்துக்காக அதிவேகமாக 1000 ரன்களைக் குவித்த வீரர்கள் பட்டியளிலும் அவர் இரண்டாவது இடத்தைப் பிடிப்பார். இங்கிலாந்து அணிக்காக இதுவரை 33 டி20 போட்டிகளில் 31 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள பில் சால்ட் 34.96 என்ற சராசரியில் 944 ரன்கள் எடுத்துள்ளார்.
இதற்கு முன் கெவின் பீட்டர்சன் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோர் இருவரும் தலா 32 இன்னிங்ஸில்1000 ரன்களை கடந்து இரண்டாம் இடத்தில் உள்ளனர். இந்த பட்டியலில் முன்னாள் வீரர் டேவிட் மலான் 24 இன்னிங்ஸ்களில் 1000 ரன்களைக் கடந்து முதலிடத்தில் உள்ளார். அதேசமயம் சர்வதேச டி20 கிரிக்கெட்டை பொறுத்தவரையில் இதுவரை எட்டு இங்கிலாந்து வீரர்கள் மட்டுமே 1000 ரன்களை எட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் டேவிட் மாலன், கெவின் பீட்டர்சன், அலெக்ஸ் ஹேல்ஸ், ஜோஸ் பட்லர், ஈயன் மோர்கன், ஜானி பேர்ஸ்டோவ், ஜேசன் ராய் மற்றும் மொயின் அலி ஆகியோர் மட்டுமே இங்கிலாந்து அணிக்காக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 1000 ரன்களை கடந்துள்ளனர்.
Also Read: Funding To Save Test Cricket
இது தவிர, இப்போட்டியில் பில் சால்ட் இரண்டு சிக்ஸர்களை அடித்தால், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அவர் தனது 50 சிக்ஸர்களை நிறைவு செய்துடன், இங்கிலாந்துக்காக இதனை செய்யும் 9ஆவது வீரர் எனும் பெருமையையும் பெறுவார். இங்கிலாந்துக்காக ஜோஸ் பட்லர், ஈயன் மோர்கன், அலெக்ஸ் ஹேல்ஸ், டேவிட் மலான், ஜானி பேர்ஸ்டோவ், ஜேசன் ராய், மொயீன் அலி ஆகியோர் மட்டுமே இந்த சாதனையை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.