இந்தியா - இங்கிலாந்து அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளன. வரும் ஜனவரி மாதம் 25ஆம் தேதி தொடங்கும் இந்த தொடர் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெற உள்ளது. இதில் 2012க்குப்பின் 14 வருடங்கள் கழித்து முதல் முறையாக இந்தியாவை அதன் சொந்த ஊரில் தோற்கடித்து டெஸ்ட் தொடரை வெல்லும் முனைப்புடன் இங்கிலாந்து விளையாட உள்ளது.

Advertisement

மறுபுறம் கடந்த 14 வருடங்களாக உலகின் எந்த அணிக்கு எதிராகவும் தங்களுடைய சொந்த மண்ணில் ஒரு தொடரில் கூட தோற்காமல் இருந்து வரும் இந்தியா இம்முறையும் இங்கிலாந்தை வீழ்த்தும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். ஏனெனில் என்ன தான் பென் ஸ்டோக்ஸ் தலைமையில் அதிரடியாக விளையாடினாலும் இந்தியாவில் இயற்கையாகவே இருக்கும் சுழலுக்கு சாதகமான மைதானங்களில் அஸ்வின், ஜடேஜா, அக்ஸர் பட்டேல் ஆகிய 3 தரமான ஸ்பின்னர்களை தாண்டி இங்கிலாந்து வெல்வது கடினமாக பார்க்கப்படுகிறது.

Advertisement

முன்னதாக கடைசியாக 2021ஆம் ஆண்டு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிய போது இந்தியா வேண்டுமென்றே சுழலுக்கு சாதகமான மைதானங்களை தயாரித்ததாக மைக்கேல் வாகன் உட்பட இங்கிலாந்தை சேர்ந்த ஏராளமானவர்கள் விமர்சித்தார்கள். ஆனால் இம்முறை முதல் நாளின் முதல் பந்திலிருந்தே பிட்ச் சுழன்றாலும் அதைப் பற்றி நாங்கள் புகார் செய்ய மாட்டோம் என இங்கிலாந்து வீரர் ஓலி போப் தெரிவித்துள்ளார்.

 இதுகுறித்து பேசிய அவர்,”இந்தியாவில் வெளிப்புற சத்தங்கள் நிறைய இருக்கும். இந்தத் தொடரில் பிட்ச் பற்றி அதிகப்படியான பேச்சுக்கள் இருக்கும். ஆனால் ஒரே பிட்ச்சில் தான் 2 அணிகளும் விளையாடுகின்றன என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். அதை சமாளிப்பதற்கு நாங்கள் தயாராக இருக்க வேண்டும். இங்கிலாந்தில் எங்களுடைய வேகப்பந்து வீச்சாளர்கள் அசத்துவதற்காக பிட்ச்களில் பச்சை புற்கள் அதிகமாக விடப்படலாம்.

எனவே தங்களின் ஸ்பின்னர்கள் அசத்துவதற்காக இந்தியாவும் அதே போல செய்தால் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. சொல்லப்போனால் குறைந்த ரன்கள் மட்டுமே அடிக்கப்படும் டெஸ்ட் போட்டிகள் பார்ப்பதற்கு அபாரமாக இருக்கும். சமீபத்திய தென் ஆப்பிரிக்க – இந்திய அணிகள் மோதிய போட்டியை நான் பார்த்தேன். பந்து பறந்த அந்த போட்டியில் பேட்ஸ்மேன்கள் ரன்கள் அடிக்க தடுமாறினார்கள். அதே போல இந்த தொடரில் ஸ்கோர்கள் இருக்கலாம். ஆனால் இம்முறை இந்தியாவின் பிட்ச்களில் முதல் பந்திலிருந்தே பந்து சுழன்றால் அதைப் பற்றி நாங்கள் புகார் செய்ய மாட்டோம்” என்று கூறியுள்ளார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News