ENGW vs INDW, 1st ODI: தீப்தி சர்மா அதிரடியில் இங்கிலாந்தை வீழ்த்தியது இந்திய அணி!
EN-W vs IN-W, 1st ODI: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தீப்தி சர்மா அரைசதம் கடந்ததுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 62 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார்.
இங்கிலாந்து மற்றும் இந்திய மகளிர் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரில் சௌத்தாம்ப்டனில் நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து மகளிர் அணிக்கு டாமி பியூமண்ட் - ஏமி ஜோன்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஏமி ஜோன்ஸ் ஒரு ரன்னிலும், டாமி பியூமண்ட் 5 ரன்னிலும் என நடையைக் கட்டினர். பின்னர் ஜோடி சேர்ந்த எம்மா லம்ப் மற்றும் கேப்டன் நாட் ஸ்கைவர் பிரண்ட் இணை பொறுப்புடன் விளையாடி விக்கெட் இழப்பை தடுத்ததுடன் அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர்.
இதில் இருவரும் 70 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், எம்மா லம்ப் 39 ரன்களுக்கும், கேப்டன் நாட் ஸ்கைவர் பிரண்ட் 41 ரன்களுக்கும் என ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அவர்களைத் தொடர்ந்து ஜோடி சேர்ந்த சோஃபியா டங்க்லி - அலிஸ் ரிச்சர்ட்ஸ் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது மட்டுமின்றி அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர். இதில் இருவரும் அரைசதம் கடந்ததன் மூலம் இங்கிலாந்து அணியும் 200 ரன்களைக் கடந்தது. இதில் அலிஸ் ரிச்சர்ட்ஸ் 53 ரன்களில் ஆட்டமிழக்க, இறுதிவரை களத்தில் இருந்த சோஃபியா டங்க்லி 9 பவுண்டரிகளுடன் 83 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
மறுமுனையில் ஆட்டமிழக்காமல் இருந்த சோஃபி எக்லெஸ்டோன் 3 பவுண்டரிகளுடன் 23 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் இங்கிலாந்து மகளிர் அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 258 ரன்களைச் சேர்த்தது. இந்திய மகளிர் அணி தரப்பில் கிராந்தி கௌத் மற்றும் ஸ்நே ரானா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணிக்கு பிரதிகா ராவல் மற்றும் ஸ்மிருதி மந்தனா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஸ்மிருதி மந்தனா 28 ரன்களிலும், பிரதிகா ராவல் 36 ரன்களிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர்.
அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய ஹர்லீன் தியோல் 27 ரன்களுக்கும், கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 17 ரன்களுக்கும் என நடைக்கட்ட இந்திய அணி 124 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதையடுத்து ஜோடி சேர்ந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் மாற்றும் தீப்தி சர்மா இணை பொறுப்பான ஆட்டத்தி வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரும் இணைந்து 5ஆவது விக்கெட்டிற்கு 90 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில் அரைசதத்தை நெருங்கிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் 48 ரன்களுக்கும், ரிச்சா கோஷ் 10 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர்.
Also Read: LIVE Cricket Score
இருப்பினும் இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த தீப்தி சர்மா அரைசதம் கடந்ததுடன், 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 62 ரன்களையும், அமஞ்சோத் கவுர் 20 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் இந்திய மகளிர் அணி 48.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. இதன்மூலம் இந்திய மகளிர் அணி 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது. இப்போட்டியில் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த தீப்தி சர்மா ஆட்டநாயகியாகத் தேர்வுசெய்யப்பட்டார்.