ENGW vs INDW: சுச்சி உபாத்யாய் விலகல்; இந்திய அணியில் சேர்க்கப்பட்ட ராதா யாதவ்!
மகளிர் கிரிக்கெட்: இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடும் இந்திய மகளிர் அணியில் தேர்வு செய்யப்பட்ட சுச்சி உபாத்யாய் காயம் காரணமாக இத்தொடரில் இருந்து விலகியுள்ளார்.
இந்திய மகளிர் அணி தற்சமயம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரானது ஜூன் 28ஆம் தேதி முதலும், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஜூலை 16ஆம் தேதி முதலும் தொடங்கவுள்ளது. இத்தொடர்களுக்கான இந்திய அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதில் இந்திய அணியின் கேப்டனாக ஹர்மன்ப்ரீத் கவுரும், அணியின் துணைகேப்டனாக ஸ்மிருதி மந்தனாவும் தொடர்கின்றனர். மேற்கொண்டு இந்த அணியில் நட்சத்திர வீராங்கனைகள் ரேனுகா சிங் மற்றும் ஸ்ரெயங்கா பாட்டில் ஆகியோர் காயம் காரணமாக அணியில் இடம்பெறவில்லை. அதேசமயம் கடந்த சில மாதங்களாக இந்திய அணியில் இடம்பிடிக்க முடியாமல் இருந்த ஷஃபாலி வர்மா டி20 அணியில் வாய்ப்பு பெற்ற நிலையில், ஒருநாள் அணியில் வாய்ப்பை இழந்துள்ளார்.
இந்த நிலையில் இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்திருந்த இளம் வீராங்க்னை சுச்சி உபாத்யாய் காயம் காரணமாக இத்தொடரில் இருந்து விலகியாதாக பிசிசிஐ தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இலங்கையில் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் தொடரின் மூலம் இந்திய அணிக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமான சுச்சி ஒரே ஒரு போட்டியில் மட்டுமே விளையாடிய நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான இந்திய அணியிலும் வாய்ப்பு பெற்றார்.
ஆனால் பெங்களூருவில் உள்ள பிசிசிஐ சிறப்பு மையத்தில் (COE) சுற்றுப்பயணத்திற்கு முந்தைய முகாமின் போது சுச்சி காயத்தை சந்தித்ததாகவும், இதனால் அவர் இத்தொடரில் இருந்து விலகக்கப்பட்டுள்ளதாகவும் பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து காயம் காரணமாக விலகிய சுச்சிக்கு பதிலாக ஆல் ரவுண்டர் ராதா யாதவ் இந்திய மகளிர் ஒருநாள் மற்றும் டி20 அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்திய டி20 அணி: ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணைக்கேப்டன்), ஷபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ், யாஸ்திகா பாட்டியா, ஹர்லீன் தியோல், தீப்தி சர்மா, ஸ்நே ராணா, ஸ்ரீ சரணி, ராதா யாதவ்*, அமன்ஜோத் கவுர், அருந்ததி ரெட்டி, கிராந்தி கவுட், சயாலி சத்கரே
Also Read: LIVE Cricket Score
இந்திய ஒருநாள் அணி: ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணைக்கேப்டன்), பிரதிகா ராவல், ஹர்லீன் தியோல், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ், யாஸ்திகா பாட்டியா, தேஜல் ஹசாப்னிஸ், தீப்தி ஷர்மா, சினே ராணா, ஸ்ரீ சரணி, ராதா யாதவ்*, அமன்ஜோத் கவுர், அருந்ததி ரெட்டி, கிராந்தி கவுட், சயாலி சத்கரே