ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் வங்கதேசத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த பாகிஸ்தான் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளது. ஏனெனில் நெதர்லாந்து மற்றும் இலங்கையை தோற்கடித்து இத்தொடரை வெற்றிகரமாக தொடக்கிய அந்த அணி இந்தியாவிடம் 191 ரன்களுக்கு சுருண்டு உலகக்கோப்பை வரலாற்றில் தொடர்ந்து 8வது முறையாக அவமான தோல்வியை சந்தித்தது.

Advertisement

அதன் பின் ஆஸ்திரேலியாவிடமும் அடிவாங்கி தோற்ற அந்த அணி கத்துக்குட்டியாக பார்க்கப்படும் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக வரலாற்றிலேயே முதல் முறையாக தோல்வியை பதிவு செய்து மற்றுமொரு அவமானத்தையும் சந்தித்தது. அதனால் வெற்றி பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்ட அந்த அணி சென்னை நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியிலும் போராடி 1 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றதால் அரையிறுதி வாய்ப்பு கேள்விக்குறியானது.

Advertisement

இந்நிலையில் கொல்கத்தாவில் நேற்று வங்கதேசத்தை தோற்கடித்து வீட்டுக்கு அனுப்பி வைத்த பாகிஸ்தான் எஞ்சிய போட்டிகளில் வெல்வதுடன் இதர அணிகள் வெற்றி தோல்விகளை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. இந்நிலையில் இந்தியாவுக்கு எதிராக சந்தித்த தோல்வி தங்களுடைய வெற்றிப் பயணத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி 4 தொடர்ச்சியான தோல்விகளில் சந்திக்க முக்கிய பங்காற்றியதாக ஃபகர் ஸமான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “கண்டிப்பாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டி எப்போதுமே மிகப்பெரியதாகும். அதில் சந்தித்த தோல்வி எங்களிடம் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தவில்லை என்று நான் சொல்வது தவறாக இருக்கும். ஆனால் எங்களுடைய வீரர்கள் அனைவரும் நிறைய கிரிக்கெட்டில் விளையாடியுள்ளார்கள். இந்தியாவுக்கு எதிராகவும் நாங்கள் நிறைய போட்டிகளில் விளையாடியுள்ளோம். அதனால் அவர்களுக்கு எதிராக அதிகமாக விளையாடாததே தோல்விக்கு காரணம் என்று சொல்ல முடியாது. 

உலகக்கோப்பை ஒவ்வொரு வெற்றியும் முக்கியமாகும். இந்த வெற்றிக்காக நாங்கள் காத்திருந்தோம். தற்போது நாங்கள் அரையிறுதிக்கு செல்வதற்கு அது நடக்க வேண்டும் இது நடக்கக் கூடாது என்பது போன்ற கணக்கீடுகள் இருக்கின்றன. ஆனால் எங்களுடைய இலக்கு அரையிறுதிக்கு செல்வதாகும். அதற்காக நாங்கள் எங்களால் முடிந்த முயற்சிகளை எடுப்போம்” என்று கூறினார். 

இந்த சூழ்நிலையில் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான தங்களுடைய கடைசி 2 போட்டிகளில் பாகிஸ்தான் வெல்ல வேண்டும். அது போக தற்போது டாப் 4 இடங்களில் இருக்கும் நியூசிலாந்து அல்லது ஆஸ்திரேலியா தங்களுடைய கடைசி 3 போட்டிகளில் 2 அல்லது 3 தோல்விகளை பதிவு செய்தால் பாகிஸ்தான் அரையிறுதிக்கு செல்ல வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News