என் கணவர் விளையாடும் அணிக்கும் நான் ஆதரவாக இருக்க வேண்டும் - வினி மேக்ஸ்வெல்!
இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி 6ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி அசத்தியது. இந்திய அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்போடு இருந்த இந்திய ரசிகர்களுக்கு இது பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தது.
இதையடுத்து சமூக வலைதளங்களில் பலரும் வருத்தத்துடன் இந்திய அணியின் தோல்வி குறித்துப் பதிவிட்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி, ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷ், உலகக் கோப்பையின் மீது கால் வைத்தபடி வெளியான புகைப்படம் சமூக வலைதளங்களில் இன்று காலை முதல் பெரும் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் தமிழ் நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட ஆஸ்திரேலிய அணி வீரர் கிளென் மேக்ஸ்வெல்லின் மனைவி வினி மேக்ஸ்வெல், ஆஸ்திரேலியா வெற்றியைக் கொண்டாடி சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இதைக் கண்ட பலரும், "இந்திய வம்சாவளியாக இருந்து கொண்டு இந்தியாவின் தோல்வியைக் கொண்டாடுகிறார் வினி" என்று விமர்சித்து வருகின்றனர்.
தற்போது இதற்குப் பதிலளித்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள வினி மேக்ஸ்வெல், "வெறுப்புடன் தனிப்பட்ட முறையில் எனக்கு மேசேஜ் அனுப்புபவர்கள் கொஞ்சம் மரியாதையுடன் நடந்துகொள்ள வேண்டும். நான் பிறந்து வளர்ந்த நாட்டிற்கு ஆதரவாக இருக்க வேண்டிய அதே சமயம், என் குழந்தைக்கு அப்பாவாக இருக்கும் என் கணவர் விளையாடும் அணிக்கு நான் ஆதரவாக இருக்க வேண்டும். இது சிலருக்குப் புரிவதில்லை. உலகிற்கு எது முக்கியமோ, எது முக்கியமான பிரச்னைகளோ அதில் கவனம் செலுத்துங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆஸ்திரேலிய அணி வீரர் மேக்ஸ்வெல்லின் மனைவியான வினி, தமிழ்நாட்டைப் பூர்விகமாகக் கொண்டவர். ஆஸ்திரேலியாவில் படித்த அவர், மேக்ஸ்வெல்லைக் காதலித்து கடந்த 2022ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இருவருக்கும் கடந்த செப்டம்பர் மாதம்தான் அழகான ஆண் குழந்தை பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.