கேப்டன்ஷிப் பதிவிலிருந்து விராட் கோலியை நான் நீக்கவில்லை - சௌரவ் கங்குலி!
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரராக, சிறந்த கேப்டனாகவும் வளம் வந்தவர் விராட் கோலி. இந்நிலையில், அவர் சர்ச்சைக்குரிய முறையில் கடந்த வருடம் கேப்டன்ஷிப் பதவிகளை ராஜினாமா செய்ததற்கு அப்போதைய பிசிசிஐ தலைவராக இருந்த சௌரவ் கங்குலி முக்கிய காரணமாக இருந்ததாக அவருடைய ரசிகர்கள் இப்போதும் விமர்சித்து வருகின்றனர். கடந்த 2017இல் முழு நேர கேப்டனாக பொறுப்பேற்ற விராட் கோலி தலைமையில் இருதரப்பு தொடர்களில் மிரட்டிய இந்தியா ஐசிசி தொடர்களில் தோல்வியை சந்தித்தது.
போதாக்குறைக்கு ஐபிஎல் தொடரிலும் ஒரு கோப்பையை கூட முடியாமல் விராட் கோலி தடுமாறினார். அதனால் அவர் இருக்கும் வரை இந்தியா உலகக் கோப்பையை வெல்ல முடியாது என்ற விமர்சனங்கள் இருந்தன. அதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக 2021 டி20 உலகக் கோப்பையுடன் டி20 கேப்டன்ஷிப் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்த விராட் கோலி ஒருநாள் மற்றும் டெஸ்ட் கேப்டனாக தொடர்வேன் என்று தெரிவித்திருந்தார்.
ஆனால் அப்போது வெள்ளைப் பந்து கிரிக்கெட்டுக்கு 2 வெவ்வேறு கேப்டன்கள் தேவையில்லை என்று கருதிய கங்குலி தலைமையிலான பிசிசிஐ மற்றும் தேர்வுக் குழுவினர் விராட் கோலியின் ஒருநாள் கேப்டன்ஷிப் பதவியை வலுக்கட்டாயமாக பறித்து ரோஹித் சர்மாவிடம் ஒப்படைத்தது. அதனால் ஏமாற்றமடைந்த விராட் கோலி கடந்த 2022 ஜனவரி மாதம் தம்முடைய டெஸ்ட் கேப்டன்ஷிப் பதவியையும் ராஜினாமா செய்வதாக அறிவித்தது இன்று வரை இந்திய கிரிக்கெட்டில் சர்ச்சையாக இருந்து வருகிறது.
இந்நிலையில் விராட் கோலியை வலுக்கட்டாயமாக தாம் கேப்டன்ஷிப் பதவியிலிருந்து நீக்கவில்லை என்று முன்னாள் பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “கேப்டன்ஷிப் பதிவிலிருந்து விராட் கோலியை நான் நீக்கவில்லை. இதை நான் பலமுறை சொல்லி விட்டேன். அந்த சமயத்தில் விராட் கோலி டி20 கேப்டன்ஷிப் பதவியில் தொடர்வதற்கு விரும்பவில்லை. எனவே அந்த முடிவை அவர் தான் எடுத்தார்.
அப்போது நான் “நீங்கள் டி20 கேப்டனாக இருக்கவில்லை என்றால் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் மொத்தமாக கேப்டனாக இல்லாமல் இருப்பதே இந்திய அணிக்கு நன்மையாக இருக்கும்” என்று அவரிடம் சொன்னேன். குறிப்பாக வெள்ளைப்பந்து கிரிக்கெட்டுக்கும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கும் வெவ்வேறு கேப்டன்கள் இருக்கலாம் என்று அவரிடம் நான் சொன்னேன். அதை அவர் ஏற்காததால் ரோஹித் சர்மாவை கேப்டன்ஷிப் பொறுப்பேற்க நான் தள்ளினேன்.
ஏனெனில் அவர் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் இந்திய அணியை வழி நடத்துவதற்கு விரும்பினார். அந்த வகையில் ரோஹித் புதிய கேப்டனாக வந்ததில் எனக்கும் சிறிய பங்கு இருக்கிறது. ஆனால் நிர்வாகிகள் என்ன செய்தாலும் களத்தில் வீரர்கள் சிறப்பாக விளையாடினால் தான் இந்தியா வெற்றி பெற முடியும். இந்திய கிரிக்கெட்டை சிறப்பாக வழி நடத்துவதற்காகவே என்னை பிசிசிஐ தலைவராக நியமித்தார்கள்” என்று கூறியுள்ளார்.