உலகக்கோப்பை தொடரில் இருந்து அவரை நீக்க வேண்டும் - ஸ்ரேயாஸ் ஐயர் குறித்து கௌதம் கம்பீர்

Updated: Mon, Sep 18 2023 14:52 IST
Image Source: Google

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரை 8ஆவது முறையாக இந்திய அணி கைப்பற்றியுள்ளது. இந்திய அணியின் செயல்பாடுகள் சிறப்பாக இருந்தாலும், ஸ்ரேயாஸ் ஐயரின் காயம் அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. பாகிஸ்தான் அணிக்கு எதிரான சூப்பர் 4 போட்டியில் இருந்து கடைசி நேரத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக விலகினார்.

அதன்பின் ஸ்ரேயாஸ் ஐயர் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம்பெறவில்லை. இதுகுறித்து பேசிய இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, “முதுகு பிடிப்பால் ஸ்ரேயாஸ் ஐயர் இந்திய அணியில் இடம்பிடிக்கவில்லை. இறுதிப்போட்டியின் போது அவருக்கென சில ஃபிட்னஸ் டெஸ்ட் வைக்கப்பட்டது. அதில் 99 சதவிகித ஃபிட்னஸ் தேர்வை முடித்துவிட்டார். அதனால் இன்னும் சில நாட்களில் ஸ்ரேயாஸ் ஐயர் தயாராகிவிடுவார்” என்று கூறினார்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது காயமடைந்த ஸ்ரேயாஸ் ஐயர் 6 மாதங்களுக்கு பின் இந்திய அணிக்கு திரும்பினார். ஆனால் இந்திய அணிக்கு திரும்பிய பின், ஒரே போட்டியில் மீண்டும் முதுகு பிடிப்பால் காயமடைந்தார். இது ரசிகர்களிடையே விரக்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் ரசிகர்களின் குரலாக கம்பீரின் காட்டமான விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.

இதுகுறித்து பேசிய கம்பீர், “ஸ்ரேயாஸ் ஐயர் தொடர்ந்து காயமடைவது இந்திய அணிக்கு பின்னடைவு தான். நீண்ட காலமாக ஓய்வில் இருந்துவிட்டு, ஆசியக் கோப்பைக்கு கம்பேக் கொடுத்தார். ஆனால் இப்போது ஸ்ரேயாஸ் ஐயர் மீண்டும் காயமடைந்துள்ளார். வரும் நாட்களில் ஸ்ரேயாஸ் ஐயர் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இருந்து நீக்கப்படுவார். நிச்சயம் அவரை அணியில் இருந்து நீக்குவதை பார்ப்பீர்கள். உலகக்கோப்பை தொடருக்கு முழு ஃபிட்னஸுடன் இருக்கும் வீரர்களுடன் செல்ல வேண்டியது அவசியமான ஒன்று.

திடீரென ஒரு வீரர் காயமடைந்தாலோ, முதுகு பிடிப்பு என்று விலகினாலோ உடனடியாக மாற்று வீரரை தேர்வு செய்ய வேண்டும். அதேபோல் ஸ்ரேயாஸ் ஐயரின் பேட்டிங் ஃபார்ம் எப்படி இருக்கிறது என்பது இதுவரை தெரியவில்லை. 7 மாதங்களுக்கு முன் ஸ்ரேயாஸ் ஐயர் நல்ல ஃபார்மில் இருந்தார். ஆனால் தற்போது ஒரேயொரு போட்டியில் தான் ஆடி இருக்கிறார். இதனால் உலகக்கோப்பை தொடரில் இருந்து அவரை நீக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை