IND vs AUS, 2nd Test: கோலி தனது சொந்த ஊரில் சதத்தை அடிப்பார் என தோன்றுகிறது - சுனில் கவாஸ்கர்!

Updated: Tue, Feb 14 2023 18:56 IST
Image Source: Google

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. நாக்பூரில் நடந்த முதல் டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. இந்த போட்டியில் ரோஹித் சர்மா அட்டகாசமான சதத்தை விளாசி கம்பேக் கொடுத்தார். மேலும் 3 வடிவ கிரிக்கெட்டிலும் சதமடித்த முதல் இந்திய கேப்டன் எனும் பெருமையையும் பெற்றார். இதே போல ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்‌ஷர் பட்டேல் ஆகியோர் அரைசதம் அடித்து அசத்தினர்.

எதிர்பார்க்காத பல வீரர்களும் முதல் டெஸ்டில் கலக்கிய சூழலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி மட்டும் சொதப்பினார். ஆசிய கோப்பை மூலம் பழைய ஃபார்முக்கு திரும்பியுள்ள கோலி டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் என 4 சதங்களை விளாசியுள்ளார். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் இன்னும் தனது சதத்தை அடிக்காமல் இருந்து வருகிறார். 2019ஆம் ஆண்டு வங்கதேசத்துக்கு எதிராக அடித்ததே கடைசி சதமாகும்.

இந்நிலையில் கோலி 2ஆவது டெஸ்டில் எதிர்பார்க்காத ஆட்டத்தை கொடுப்பார் என சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “ஒரே ஒரு டெஸ்ட் போட்டி தானே முடிந்துள்ளது. இன்னும் மீதம் 3 போட்டிகள் இருக்கின்றன. கோலி போன்ற வீரர் அனைத்து போட்டிகளிலும் அதிக ரன் அடிக்க வேண்டும் என்று தான் ரசிகர்கள் நினைப்பார்கள். எனினும் ஒரே ஒரு இன்னிங்ஸில் தானே விளையாடியுள்ளார், பொறுத்திருங்கள்.

2ஆவது டெஸ்ட் போட்டி டெல்லியில் நடைபெறுவதால், கோலி தனது சொந்த ஊரில் சதத்தை அடிப்பார் என தோன்றுகிறது. ஏனென்றால் அதிகம் பழகிய மைதானத்தில் பெரிய ஸ்கோர் அடிக்க அதிக வாய்ப்புகள் உள்ளது”  என சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். 

விராட் கோலி கடைசியாக கடந்த 2017ஆம் ஆண்டு டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடினார். இலங்கைக்கு எதிரான அந்த போட்டியில் 287 பந்துகளை சந்தித்த விராட் கோலி 25 பவுண்டரிகளுடன் 243 ரன்களை விளாசினார். அப்போது விராட் கோலியின் சிறந்த டெஸ்ட் ஸ்கோர் அதுவாக தான் இருந்தது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை