நான் இப்போது சிஎஸ்கே விற்காக விளையாடப் போகிறேன் - அஸ்வின்!
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் அனைந்து விதமான சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக நேற்று அறிவித்தார். இதனையடுத்து அவர் இந்திய அணியில் இருந்து விலகி இன்றைய தினம் நாடு திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
அதன்படி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்த அஸ்வின் இன்று சென்னை வந்தடைந்தார். ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னை திரும்பிய அஸ்வினுக்கு விமான நிலையத்தில் ரசிகர்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து இல்லத்திற்கு சென்ற அஸ்வினுக்கு உறவினர்கள், ரசிகர்கள் என அனைவரும் திரண்டு மேள தாளங்களுடன் வரவேற்பு அளித்தனர். இதுகுறித்த காணொளிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இந்நிலையில் விடுதிரும்பிய அஸ்வின் செய்தியாளர்களிடம் பேசுகையில், “நான் இப்போது சிஎஸ்கே விற்காக விளையாடப் போகிறேன், என்னால் முடிந்தவரை விளையாட முயற்சித்தாலும் ஆச்சரியப்பட வேண்டாம். அஸ்வின் என்ற கிரிக்கெட் வீரர் முடிந்துவிட்டார் என்று நான் நினைக்கவில்லை, இந்திய கிரிக்கெட்டில் இருந்து வேண்டுமானால் அஸ்வின் விலகியுள்ளார். அதற்காக கிரிக்கெட்டை விட்டு விலகிவிட்டார் என்று அர்த்தமில்லை, அவ்வளவுதான்.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவிப்பது என்பது பலருக்கும் உணர்ச்சிகரமானது. அது உணர்ச்சிகரமானதாக இருந்தாகவேண்டும். ஆனால் நான் தற்போது இந்த முடிவை எடுத்ததில் எனக்கு இது ஒரு பெரிய நிம்மதி மற்றும் திருப்தியைத் தருகிறது. மேலும் இந்த முடிவு குறித்த யோசைனைகள் சிறிது காலம் என மனதில் ஓடிக்கொண்டிருந்தது, ஆனால் அது மிகவும் உள்ளுணர்வாக இருந்தது. அதனை நான் இப்போட்டியின் 4ஆவது நாளில் உணர்ந்தேன், அதனால் எனது முடிவை கடைசி நாளில் அறிவித்தேன்” என்று தெரிவித்துள்ளார்.
இந்திய அணிக்காக 2010ஆம் ஆண்டு அறிமுகமான ரவிச்சந்திரன் அஸ்வின் இதுநாள் வரை 106 டெஸ்ட், 116 ஒருநாள் மற்றும் 65 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். இதில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தவிர்க்க முடியாத வீரராக வலம் வந்த அஸ்வின் 151 இன்னிங்ஸில் 6 சதங்கள், 14 அரைசதங்கள் என 3503 ரன்களையும், 37 ஐந்து விக்கெட் ஹாலுடன் 537 விக்கெட்டுகளையும் கைப்பற்றி பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.
Also Read: Funding To Save Test Cricket
இதுதவிர்த்து 116 ஒருநாள் போட்டிகளில் 707 ரன்களையும், 156 விக்கெட்டுகளையும், 65 டி20 போட்டிகளில் 72 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியுள்ளார். மேற்கொண்டு 2011ஆம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரை வென்ற இந்திய அணியிலும் அஸ்வின் இடம்பிடித்ததுடன், இந்திய அணி கோப்பையை வெல்வதற்கும் மிகப்பெரும் உறுதுணையாக இருந்தார் என்பதை யாராலும் மறக்க முடியாது. இந்நிலையில் அஸ்வினின் இந்த ஓய்வு முடிவு ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.