விராட் கோலியை க்ளீன் போல்டாக்கிய ஹிமான்ஷு சங்வான் - வைரலாகும் காணொளி!
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் 2024-25 சீசனின் முதல் கட்ட போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இரண்டாம் கட்டம் ஜனவரி 23ஆம் தேதி முதல் தொடங்கியது. இந்நிலையில் இத்தொடரின் அடுத்த சுற்று போட்டிகள் நேற்று தொடங்கிய. அதன்படி எலைட் குரூப் டி பிரிவில் இடம்பிடித்துள்ள ரயில்வேஸ் மற்றும் டெல்லி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதனையடுத்து களமிறங்கிய ரயில்வேஸ் அணியில் உபேந்திர யாதவ் மற்றும் கரண் சர்மா ஆகியோர் அரைசதம் கடந்த நிலையில் மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் அந்த அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்ட்களையும் இழந்து 241 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக உபேந்திர யாதவ் 95 ரன்களையும், கரண் சர்மா 50 ரன்களையும் சேர்த்தனர். டெல்லி அணி தரப்பில் நவ்தீப் சைனி, சுமித் மதுர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய டெல்லி அணிக்கு அர்பித் ரானா - சனத் சங்க்வான் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அர்பித் ரானா 10 ரன்னிலும், அடுத்து களமிறங்கிய யாஷ் துல் 32 ரன்னிலும் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்ப, அடுத்து களமிறங்கிய நட்சத்திர வீரர் விராட் கோலி 15 பந்துகளை எதிர்கொண்டு 6 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.
அவரைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான சனத் சங்வானும் 30 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்துள்ள ஆயூஷ் பதோனி - சுமித் மதுர் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தி வருகின்றனர். இதில் ஆயூஷ் பதோனி அரைசதம் கடந்து அசத்தினார். இதன்மூலம் டெல்லி அணி தற்போது வரை 4 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்களை சேர்த்துள்ளது.
இந்நிலையில் 12ஆண்டுகளுக்கு பிறகு ரஞ்சி கோப்பை தொடரில் விளையாடும் விராட் கோலி சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தது ரசிகர்களை பெரும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. அதன்படி இப்போட்டியின் 28வது ஓவரில் சங்வான் வீசிய நான்காவது பந்தை விராட் கோலி கவர் டிரைவ் அடிக்க முன்று தவறவிட்டார். இதனால் பந்து அவரது ஸ்டம்பை தாக்கியதுடன் அதனை பறக்கவும் செய்தது. இந்நிலையில் விராட் கோலி ஆட்டமிழந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி உள்ளூர் போட்டிகளில் பேட்டிங் செய்வதைப் பார்க்க காலை 6 மணி முதலே ரசிகர்கள் மைதானத்திற்கு வெளியே வரிசையில் நின்று காத்திருந்த நிலையில், அவர் வெறும் 6 ரன்களுக்கே விக்கெட்டை இழந்தது அனைவரையும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியது. முன்னதாக ஆஸ்திரேலிய தொடரிலும் விராட் கோலி சோபிக்க தவறிய நிலையில் தற்போது உள்ளூர் போட்டிகளிலும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது விமர்சனங்களுக்கு வழி வகுத்துள்ளது.
ரயில்வேஸ் பிளேயிங் லெவன்: அஞ்சித் யாதவ், விவேக் சிங், சூரஜ் அஹுஜா(கேப்டன்), உபேந்திர யாதவ், முகமது சைஃப், பார்கவ் மெராய், கர்ண் சர்மா, ராகுல் சர்மா, ஹிமான்ஷு சங்வான், அயன் சவுதாரி, குணால் யாதவ்.
Also Read: Funding To Save Test Cricket
டெல்லி பிளேயிங் லெவன்: அர்பித் ராணா, சனத் சங்வான், விராட் கோலி, யாஷ் துல், ஆயுஷ் பதோனி (கேப்டன்), பிரணவ் ராஜுவன்ஷி, சுமித் மாத்தூர், சிவம் சர்மா, நவ்தீப் சைனி, மணி கிரேவால், சித்தாந்த் சர்மா.