ஆல் டைம் சிறந்த டெஸ்ட் லெவனை தேர்வு செய்த ஹர்பஜன் சிங்; நட்சத்திர வீரர்களுக்கு இடமில்லை!

Updated: Sat, Sep 28 2024 21:39 IST
Image Source: Google

இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங். இந்திய அணிக்காக கடந்த 1998ஆம் ஆண்டு அறிமுகமான இவர் 2016ஆம் ஆண்டு வரை சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடினார். இதில் அவர் பல்வேறு சாதனைகளையும் தனது பெயரில் ஹர்பஜன் சிங் பதிவுசெய்துள்ளார். 

அந்தவகையில் இதுவரை இந்திய அணிக்காக 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ஹர்பஜன் சிங் 417 விக்கெட்டுகளையும், 2 சதம், 9 அரைசதங்கள் என 2224 ரன்களையும் சேர்த்துள்ளார். மேற்கொண்டு 236 ஒருநாள் போட்டிகளில் 269 விக்கெட்டுகளையும், 1237 ரன்களையும் எடுத்துள்ளார். இதுதவிர 28 டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடிய ஹர்பஜன் சிங் 25 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 

இதுதவிர்த்து ஐபிஎல் தொடரில் 163 போட்டிகளில் விளையாடியுள்ள ஹர்பஜன் சிங் 150 விக்கெட்டுகளையும், 833 ரன்களையும் சேர்த்துள்ளார். இந்நிலையில் தனது ஓய்வுக்கு பிறகு தொலைக்காட்சியில் வர்ணனையாளராக செயல்பட்டு வரும் அவர், சமீபத்தில் தனது ஆல் டைம் சிறந்த டெஸ்ட் லெவன் அணியைத் தேர்வு செய்து அசத்தியுள்ளார். இதில் அவர் தேர்வு செய்த வீரர்களைக் காட்டிலும், தேர்வு செய்யாத வீரர்களின் பட்டியலை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அதன்படி ஹர்பஜன் சிங் தேர்வு செய்துள்ள இந்த அணியில் தொடக்க வீரர்களாக இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் அலெஸ்டர் குக் மற்றும் இந்திய அணியின் அதிரடி வீரர் விரேந்திர சேவாக் ஆகியோரைத் தேர்ந்தெடுத்துள்ளார். மேற்கொண்டு மூன்றாம் வரிசையில் வெஸ்ட் இண்டீஸுன் பிரையன் லாராவைத் தேர்வு செய்த அவர், நான்காம் வரிசையில் இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை தேர்வு செய்துள்ளார். 

அதன்பின் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் வாக்கை தேர்வு செய்த ஹர்பஜன் சிங் அவரையே இந்த அணியின் கேப்டனாகவும் நியமித்துள்ளார். இது தவிர தென் ஆப்பிரிக்காவின் ஜாக் காலிஸ், இலங்கை அணியின் குமார் சங்கக்காரா, ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்னே, பாகிஸ்தானின் வாசிம் அக்ரம், ஆஸ்திரேலியாவின் கிளென் மெக்ராத், இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோரைத் தேர்வு செய்ததுடன், 12ஆவது வீரராக முத்தையா முரளிதரனை தேர்ந்தெடுத்துள்ளார்.

ஹர்பஜன் சிங் தேர்வு செய்த இந்த அணியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, ராகுல் டிராவிட், ரோஹித் சர்மா, விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு வழங்கவில்லை. இதுதவிர ஜோ ரூட், ஸ்டீவ் ஸ்மித் மற்றும் கேன் வில்லியம்சன் போன்ற சமகால டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த விளங்கிய பேட்ஸ்மேன்களையும் அவர் தனது அணியில் சேர்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: Funding To Save Test Cricket

ஹர்பஜன் சிங் தேர்வு செய்த ஆல் டைம் டெஸ்ட் லெவன்: அலஸ்டர் குக், வீரேந்திர சேவாக், பிரையன் லாரா, சச்சின் டெண்டுல்கர், ஸ்டீவ் வா (கேப்டன்), ஜாக் காலிஸ், குமார் சங்கக்கார (விக்கெட் கீப்பர்), ஷேன் வார்னே, வாசிம் அக்ரம், கிளென் மெக்ராத், ஜேம்ஸ் ஆண்டர்சன், முத்தையா முரளிதரன் (12வது வீரர்).

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை