புவனேஷ்வர், பும்ராவின் சாதனையை முறியடித்த ஹர்திக் பாண்டியா!
கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிராக முதல் டி20 சர்வதேச போட்டியில் இந்திய ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா தனது பெயரில் ஒரு சிறப்பு சாதனையைப் பதிவு செய்தார். இப்போடியில் சிறப்பாக பந்து வீசிய ஹார்திக், தனது நான்கு ஓவர்களில் 42 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஜேக்கப் பெத்தேல் மற்றும் ஜோஃப்ரா ஆர்ச்சரின் விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இப்போட்டியில் அவர் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் இந்தியாவுக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் புவனேஷ்வர் குமார் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோரை முந்தி ஹார்திக் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார். இதற்கு முன் இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் புவனேஷ்வர் 86 இன்னிங்ஸ்களில் 90 விக்கெட்டுகளையும், பும்ரா 69 இன்னிங்ஸ்களில் 89 விக்கெட்டுகளையும் வீழ்த்தி மூன்றும் மற்றும் நான்காம் இடங்களில் இருந்தனர்.
ஆனால் தற்போது ஹர்திக் பாண்டிய 110 போட்டிகளில் 91 விக்கெட்டுகளை கைப்பற்றி அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி வீரர்கள் பட்டியலில் மூன்றாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்த பட்டியளில் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் 97 விக்கெட்டுகளுடன் முதலிடத்திலும், யுஸ்வேந்திர சஹால் 96 விக்கெட்டுகளுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளனர். அதேசமயம் அர்ஷ்தீப் சிங்கும் இப்போட்டியின் மூலம் முதலிடத்தை பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதவிர்த்து இப்போட்டியில் ஹர்திக் பாண்டியா 3 ரன்களைச் சேர்த்ததுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இலக்கை துரத்தும் போது ஹர்திக் பாண்டியா ஆட்டமிழக்காமல் இருப்பது இது 10ஆவது முறையாகும். இதன்மூலம் இந்திய அணிக்காக இலக்கை துரத்தும் போது அதிக முறை ஆட்டமிழக்காமல் இருந்த வீரர்கள் அடிப்படையில், ரோஹித் சர்மாவுடன் இணைந்து அவர் தற்போது நான்காவது இடத்தைப் பிடித்துள்ளார்.
இந்த பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி 20 முறை ஆட்டமிழக்காமல் இருந்து முதலிடத்தை தக்கவைத்துள்ளார். அவரைத் தொடர்ந்து விராட் கோலி 18 முறை ஆட்டமிழக்காமல் இருந்து இரண்டாம் இடத்தையும், தினேஷ் கார்த்திக் 14 முறை ஆட்டமிழக்காமல் இருந்து மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ள நிலையில், தற்போது ரோஹித் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் கூட்டாக நான்காம் இடத்தைப் பிடித்துள்ளனர்.
Also Read: Funding To Save Test Cricket
இந்தப் போட்டியில், இந்தியா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 132 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய இந்தியா அணி 12.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.