கண்டிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் நான் விளையாட முயற்சி செய்வேன் - ஹர்திக் பாண்டியா!
இலங்கைக்கு எதிரான 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள், நியூசிலாந்துக்கு எதிரான 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடி வந்தது. இதைத் தொடர்ந்து தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 9 ஆம் தேதி நாக்பூர் மைதானத்தில் தொடங்குகிறது. முதல் 2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இதில், ஸ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக இந்த டெஸ்ட் போட்டியில் பங்கேற்க மாட்டார் என்று ஏற்கனவே அறிவிப்பு வெளியானது.
நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 3 போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே உலக சாம்பியன்ஷிப் தொடருக்கு தகுதி பெற முடியும். ஒரு நாள் போட்டிகளிலும், டி20 போட்டிகளிலும் சிறப்பான பங்களிப்பை கொடுத்து வந்த ஹர்திக் பாண்டியா டெஸ்ட் தொடரில் மட்டும் இதுவரையில் பங்கேற்கவில்லை.
கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை 26 ஆம் தேதி இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூலம் டெஸ்ட் தொடரில் அறிமுகமானார். அதன் பிறகு கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30 ஆம் தேதி இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடினார். இது தான் அவரது கடைசி டெஸ்ட் போட்டி.
அதன் பிறகு எந்த டெஸ்ட் போட்டியிலும் ஹர்திக் பாண்டியா களமிறங்கவில்லை. மாறாக ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார். ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி இலங்கைக்கு எதிரான டி20 தொடரையும், நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரையும் கைப்பற்றியது.
இங்கிலாந்து பென் ஸ்டோக்ஸ், ஆஸ்திரேலியாவில் கேமரான் கிரீன், மிட்செல் மார்ஸ் என்று வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர்கள் இருக்கும் நிலையில், இந்திய அணியில் சுழற்பந்து வீச்சு ஆல் ரவுண்டர்கள் மட்டுமே தான் இருக்கிறாகள். ஹர்திக் பாண்டியா போன்று வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர்கள் அணியில் இல்லை.
அணியில் இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் இருக்கும் நிலையில், 3ஆவதாக ஒரு வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் அணியில் இருந்தால் அது கூடுதல் பலமாக இருக்கும். ஏற்கனவே விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் அணியில் இல்லாத நிலையில், ஹர்திக் பாண்டியா போன்று ஒரு வீரர் அணியில் இடம் பெற்றால் அணிக்கு கூடுதல் பலமாக இருக்கும். இதுவரையில் ஹர்திக் பாண்டியா 11 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெஸ்ட் போட்டியில் விளையாடுவது குறித்து ஹர்திக் பாண்டியா கூறுகையில், “இப்போது எனது கவனம் எல்லாம் வெள்ளை நிற கிரிக்கெட் தான். நேரமும், காலமும் சரியாக இருக்கும் போது எனது உடல் தகுதி சரியாக இருந்தால் கண்டிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் நான் விளையாட முயற்சி செய்வேன்” என்று அவர் கூறியுள்ளார்.