குடும்பத்தை விட வேறு எதுவும் எனக்கு முக்கியமில்லை - ஹாரி ப்ரூக் விளக்கம்!
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் வரும் 22ஆம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கவுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அந்த வகையில் ஒவ்வொரு அணியும் கோப்பையை வெல்வதற்காக தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். அந்தவகையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் தங்களது முதல் கோப்பையை வெல்வதற்காக தீவிரம் காட்டி வருகிறது.
இதில் கடந்தாண்டு கார் விபத்தில் சிக்கி ஓராண்டுக்கு மேலாக கிரிக்கெட் விளையாடாமல் இருந்த ரிஷப் பந்த் மீண்டும் அணிக்கு திரும்பியதுன், அணியின் கேப்டனாகவும் செயல்படவுள்ளது அணிக்கு மிகப்பெரும் உத்வேகத்தைக் கொடுத்துள்ளது. இந்நிலையில் நடப்பு சீசனுக்கான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இடம்பிடித்திருந்த இங்கிலாந்து அதிரடி வீரர் ஹாரி ப்ரூக் தனிப்பட்ட காரணங்களினால் ஐபிஎல் தொடரிலிருந்தும் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி நடந்து முடிந்த வீரர்கள் ஏலத்தில் ஹாரி ப்ரூக்கை ரூ.4 கோடிக்கு டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஏலத்தில் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது அவர் ஐபிஎல் தொடரிலிருந்து ஒட்டுமொத்தாக ஹாரி ப்ரூக் விலகியுள்ளதால் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பின்னடைவை சந்தித்துள்ளது. இந்நிலையில், தனது பாட்டி இறந்தன் காரணமாகவே நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளதாக ஹாரி ப்ரூக் தனது சமூகவலைதள பதிவில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது பதிவில், “வரவிருக்கும் ஐபிஎல் தொடரில் விளையாடுவதில்லை என்ற கடினமான முடிவை நான் எடுத்துள்ளேன் என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியும். டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியால் தேர்ந்தெடுக்கப்பட்டதில் நான் மிகவும் உற்சாகமாக இருந்தேன், மேலும் அனைவருடனும் இணைவதற்கு மிகவும் ஆவலுடன் இருந்தேன். இந்த முடிவின் பின்னணியில் எனது தனிப்பட்ட காரணங்களைப் பகிர்ந்து கொள்ளத் தேவையில்லை என்று நான் நினைக்கவில்லை என்றாலும், நான் விலகியதற்கான காரணம் என்ன என்று பலர் கேட்பார்கள் என்று எனக்குத் தெரியும்.
எனவே இதைப் பகிர விரும்புகிறேன். கடந்த மாதம் நான் என் பாட்டியை இழந்தேன். அவர் எனக்கு எப்போதும் உறுதுணையாக இருந்தார். நான் என் குழந்தைப் பருவத்தின் பெரும்பகுதியை அவரது வீட்டில் கழித்தேன். கிரிக்கெட் மீதான எனது அணுகுமுறையை நான் மறைந்த என் தாத்தாவால் கற்றுக்கொண்டேன். நான் அபுதாபியில் இருந்து இந்தியாவுக்கு விமானத்தில் செல்வதற்கு முந்தைய நாள் இரவு இந்திய டெஸ்ட் சுற்றுப்பயணத்தை விட்டு வெளியேற முடிவு செய்தேன்.
ஏனென்றால் என் பாட்டிக்கு உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறது என்றும், அவரால் நீண்ட காலம் உயிர் வாழ முடியாது என்றும் எனக்கு முதலில் கூறப்பட்டது. இப்போது அவர் என் குடும்பத்தை விட்டு நிரந்தரமாக பிரிந்துவிட்டார். அதனால் நான் என் குடும்பத்துடன் இருக்க வேண்டும். கடந்த சில ஆண்டுகளாக, எனது மனநலம் மற்றும் எனது குடும்ப நலனுக்கு முன்னுரிமை அளிக்கக் கற்றுக்கொண்டேன், உண்மையாகச் சொல்வதானால், குடும்பத்தை விட வேறு எதுவும் எனக்கு முக்கியமில்லை” என்று கூறியுள்ளார்.