ஐசிசி டெஸ்ட் தரவரிசை: ஹாரி புரூக், மார்கோ ஜான்சன் அபார வளர்ச்சி!
இங்கிலாந்து அணி தற்சமயம் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான் முதலாவது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்று முடிந்தது. இப்போட்டியில் இங்கிலாந்து அணியானது 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், இந்த டெஸ்ட் தொடரிலும் 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இதையடுத்து நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 6ஆம் தேதி வெல்லிங்டனில் உள்ள பேசின் ரிசர்வ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று டெஸ்ட் வீரர்களுக்கான புதுபிக்கப்பட்ட தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதில் பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இங்கிலாந்தின் ஜோ ரூட் முதலிடத்தில் உள்ள நிலையில், முதல் டெஸ்ட் போட்டியில் 171 ரன்களை விளாசிய ஹாரி புரூக் இரண்டு இடங்கள் முன்னேறி தற்போது இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். இதில் ஜோ ரூட் மற்றும் ஹாரி புரூக் ஆகியோர் இடையே 39 புள்ளிகள் மட்டுமே வித்தியாசம் உள்ளது. இந்த பட்டியளில் நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் மூன்றாம் இடத்தில் தொடர்கிறார்.
அதேசமயம் இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இரண்டு இடங்கள் பின் தங்கி 4ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். அடுத்தடுத்த இடங்களில் டேரில் மிட்செல், ரிஷப் பந்த் ஆகியோர் உள்ள நிலையில், இலங்கையின் கமிந்து மெண்டிஸ் 7ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். மேலும் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் டெம்பா பவுமா 14 இடங்கள் முன்னேறி 10ஆம் இடத்தை பிடித்துள்ளார்.
மேற்கொண்டு பந்துவீச்சாளர்கள் தரவரிசைப் பட்டியளின் முதல் நான்கு இடங்களி எந்த மாற்றமும் நிகழவில்லை. இதில் முதலிடத்தில் இந்திய அணியின் ஜஸ்பிரித் பும்ரா உள்ள நிலையில், இரண்டாம் இடத்தில் காகிசோ ரபாடாவும், மூன்றாம் இடத்தில் ஜோஷ் ஹேசில்வுட்டும், நான்காம் இடத்தில் ரவிச்சந்திரன் அஸ்வினும் உள்ளனர். மேற்கொண்டு பட் கம்மின்ஸ், ரவீந்திர ஜடேஜா, நாதன் லையன் ஆகியோரு ஒரு இடமும் தென் ஆப்பிரிக்காவின் மார்கோ ஜான்சென் 19 இடங்களும் முன்னேற்றம் கண்டுள்ளனர்.
Also Read: Funding To Save Test Cricket
டெஸ்ட் ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசையிலும் தென் ஆப்பிரிக்க அணியின் மார்கோ ஜான்சென் முன்னேற்றம் கண்டுள்ளார். இந்த பட்டியலில் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா முதலிடத்தில் நீடிக்கும் நிலையில், மார்கோ ஜான்சென் 10 இடங்கள் முன்னேறி இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். இதன் காரணமாக இந்திய அணியின் ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்ஸர் படேல் உள்ளிட்டோர் பின்னடைவை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.