கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டாலும் டிராவிஸ் பயிற்சிக்குத் திரும்புவார் - பாட் கம்மின்ஸ்!

Updated: Tue, Jan 23 2024 14:13 IST
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டாலும் டிராவிஸ் பயிற்சிக்குத் திரும்புவார் - பாட் கம்மின்ஸ்! (Image Source: Google)

வெஸ்ட் இண்டீஸ் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தற்போது 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்று முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரின் ஆரம்பத்திலேயே முன்னிலை வகிக்கிறது. 

இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் 25ஆம் தேதி பிரிஸ்பேனிலுள்ள புகழ்பெற்ற கபா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் வெற்றிபெற்று டெஸ்ட் தொடரை கைப்பற்றும் முனைப்பில் ஆஸ்திரேலிய அணியும், டெஸ்ட் தொடரை சமன் செய்யும் முனைப்பில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் விளையாடவுள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. 

இந்நிலையில் முதல் போட்டியில் சதம் விளாசி அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த நட்சத்திர வீரர் டிராவிஸ் ஹெட்டிற்கு கரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டதுடன், பயிற்சி மேற்கொள்வதற்கும் அனுமதிக்கப்படாமல் இருந்தார். இதனால் அவர் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவாரா என்ற சந்தேகமும் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.

இந்நிலையில் டிராவிஸ் ஹெட் குறித்து பேசிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ், "அவர் கிட்டத்தட்ட கரோனாவிலிருந்து குணமடைந்துவிட்டார் என்று நான் நினைக்கிறேன். அவர் நன்றாக இருப்பதினால் இன்று பயிற்சிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கிறேன். வெளிப்படையாக, அவர் இன்னும் தொற்றிலிருந்து குணமடையாவிட்டாலும், அவரால் நெறிமுறைகளை பின்பற்றி விளையாட முடியும்” என தெரிவித்துள்ளார். 

கம்மின்ஸ் கூறுவது போது கரோனாவால் பாதிக்கப்பட்ட வீரர்கள் விளையாட சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சில நெறிமுறைகளை வகுத்துள்ளது. அதன்படி போட்டி தொடங்கும் போதும் வீரருக்கு தோற்று உறுதி செய்யப்பட்டால், அந்த வீரர் பேட்டிங் செய்யும் போது சக வீரர்களுடன் சேர்ந்த அமராமல் தனிமையில் அமர வேண்டும், பந்துவீச்சின் போதும், கொண்டாட்டத்தின் போதும் சக வீரர்களுடன் நெருங்காமல் இடைவெளியில் இருக்க வேண்டும் என நெறிமுறைகளை வகுத்துள்ளது குறிப்பிடத்தக்கது

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை