ஹீதர் நைட் அரைசதத்தால் வங்கதேசத்தை வீழ்த்தியது இங்கிலாந்து!
இங்கிலாந்து - வங்கதேச மகளிர் அணிகளுக்கு இடையேயான ஐசிசி மகளிர் ஒருநாள் கிரிக்கெட் லீக் போட்டி இன்று நடைபெற்றது. கவுகாத்தியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலந்து மகளிர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய வங்கதேச அணியில் ருபியா ஹைதர் 4 ரன்னிலும், கேப்டன் நிகர் சுல்தானா ரன்கள் ஏதுமின்றியும் விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த ஷமிம் அக்தர் மற்றும் சோபனா மோஸ்ட்ரி இணை சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர்.
இதில் சோபனா மோஸ்ட்ரி அரைசதம் கடந்தார். அதன்பின் 30 ரன்களைச் சேர்த்த நிலையில் ஷமில் அக்தர் விக்கெட்டை இழக்க, 60 ரன்களுடன் சோபனா மோஸ்ட்ரியும் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய வீராங்கனைகளில் ரபெயா கான் அதிரடியாக விளையாடி 6 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 43 ரன்களைச் சேர்க்க மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் வங்கதேச மகளிர் அணி 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 178 ரன்களில் ஆல் அவுட்டானது. இங்கிலாந்து தரப்பில் சோஃபி எக்லெஸ்டோன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து மகளிர் அணிக்கும் தொடக்கம் சிறப்பானதாக அமையவில்லை. அணியின் தொடக்க வீராங்கனைகள் ஏமி ஜோன்ஸ் ஒரு ரன்னிலும், டாமி பியூமண்ட் 13 ரன்னிலும் என ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தனர். பின்னர் இணைந்த கேப்டன் நாட் ஸ்கைவர் பிரண்ட் - ஹீதர் நைட் இணை சிறப்பான ஆட்டத்தை வெள்ப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அபாரமாக விளையாடிய ஹீதர் நைட் அரைசதம் கடந்தார். அதேசமயம் நாட் ஸ்கைவர் 32 ரன்களில் ஆட்டமிழக்க, சோபியா டங்க்லி, எம்மா லம்ப் ஆகியோரும் சோபிக்க தவறினர்.
Also Read: LIVE Cricket Score
அவர்களைத் தொடர்ந்து வந்த அலிஸ் கேப்ஸியும் 20 ரன்களுடன் நடையைக் கட்டினார். இருப்பினும் இறுதிவரை களத்தில் இருந்த ஹீதர் நிஅட் 8 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 79 ரன்களையும், சார்லோட் டீன் 27 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன் மூலம் இங்கிலாந்து மகளிர் அணி 46.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி வெற்றி பெற்றது. மேலும் இந்த ஆட்டத்தில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இங்கிலாந்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்த ஹீதர் நைட் ஆட்டநாயகியாக தேர்வு செய்யப்பட்டார்.