காயம் காரணமாக டி20 தொடரிலிருந்து விலகிய ஹென்றி, செய்ஃபெர்ட்; பின்னடைவை சந்திக்கும் நியூசி!
ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடர் பிப்ரவரி 21ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. மேலும் இத்தொடருக்கான ஆஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து அணிகளும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன.
அதன்படி நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் மற்றும் அதிரடி வீரர் டேரில் மிட்செல் ஆகியோர் இத்தொடரிலிருந்து விலகியுள்ளதால், இத்தொடருக்கான நியூசிலாந்து அணி கேப்டனாக மிட்செல் சாண்ட்னர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் டிரெண்ட் போல்ட் மீண்டும் நியூசிலாந்து அணிக்கு திரும்பியுள்ளது அணிக்கு பெரும் பலமாக பார்க்கப்படுகிறது. அவர்களுடன் கிளென் பிலீப்ஸ், டிம் செய்ஃபெர்ட், டெவான் கான்வே, ரச்சின் ரவீந்திரா, லோக்கி ஃபர்குசன், மேட் ஹென்றி ஆகியோரும் அணியில் இடம்பிடித்திருந்தனர்.
இந்நிலையில் இந்த டி20 தொடரிலிருந்து காயம் காரணமாக நியூசிலாந்து அணியின் டிம் செய்ஃபெர்ட் மற்றும் மேட் ஹென்றி ஆகியோர் விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது மேட் ஹென்றி காயமடைந்ததாகவும், நியூசிலாந்தின் உள்ளூர் கிரிக்கெட் தொடரில் விளையாடிவந்த டிம் செய்ஃபெர்ட்டும் காயத்தை சந்தித்துள்ளதாகவும் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இதன் காரணமாக அவர்கள் இருவரும் ஆஸ்திரேலிய அணிக்கெதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலிருந்து விலகியுள்ளனர். இதையடுத்து அவர்களுக்கு மாற்று வீரர்களாக பென் சீயர்ஸ் மற்றும் வில் யங் ஆக்கியோர் நியூசிலாந்து டி20 அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஏற்கெனவே வில்லியம்சன், டேரில் மிட்செல் ஆகியோர் தொடரிலிருந்து விலகியுள்ள நிலையில், தற்போது செய்ஃபெர்ட், ஹென்றி ஆகியோரும் விலகியுள்ளது அந்த அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
நியூசிலாந்து டி20 ஐ அணி: மிட்செல் சான்ட்னர் (கே), ஃபின் ஆலன், டிரென்ட் போல்ட் (2 & 3 போட்டி), மார்க் சாப்மேன், ஜோஷ் கிளார்க்சன், டெவான் கான்வே, லோக்கி ஃபர்குசன், பென் சீயர்ஸ், ஆடம் மில்னே, கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திர, வில் யங், இஷ் சோதி, டிம் சௌதீ (முதல் போட்டி).
டி20 அட்டவணை
- முதல் டி20 - பிப்ரவரி 21 - வெலிங்டன்
- 2ஆவது டி20 - பிப்ரவரி 23, ஆக்லாந்து
- 3ஆவது T20I - பிப்ரவரி 25, ஆக்லாந்து