இந்த சதத்தை கிரஹாம் தோர்ப்பிற்கு அர்ப்பணிக்கிறேன் - ஜோ ரூட்!

Updated: Fri, Aug 30 2024 11:49 IST
Image Source: Google

இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது புகழ்பெற்ற லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணியில் டேனியல் லாரன்ஸ், ஒல்லி போப் ஆகியோர் சொற்ப ரன்களுக்கும், பென் டக்கெட் 40 ரன்களிலும், ஹாரி புரூக் 33 ரன்களிலும், ஜேமி ஸ்மித் 21 ரன்களிலும், கிறிஸ் வோக்ஸ் 6 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.

அதேசமயம் இப்போட்டியில் நான்காம் வரிசையில் களமிறங்கிய ஜோ ரூட் அரைசதம் கடந்து அசத்தியதுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினார். அதேசமயம், அவருடன் இணைந்து விளையாடிய கஸ் அட்கின்சனும் அபாரமாக விளையாட அணியின் ஸ்கோரும் உயரத்தொடங்கியது. இப்போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோ ரூட் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 33ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். 

தொடர்ந்து அபாரமாக விளையாடிய ஜோ ரூட் 143 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அதிரடியாக விளையாடிய கஸ் அட்கின்சன் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இதன்மூலம் இங்கிலாந்து அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 358 ரன்களைச் சேர்த்தது. இதில் ஆட்டமிழக்காமல் இருந்த கஸ் அட்கின்சன் 74 ரன்களுடனும், மேத்யூ பாட்ஸ் 20 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

இந்நிலையில் இப்போட்டியில் சதமடித்தது குறித்து பேசிய ஜோ ரூட், இந்த சதத்தை தனது முன்னாள் பேட்டிங் ஆலோசகர் மறைந்த கிரஹாம் தோர்ப்பிற்கு அர்ப்பணிப்பதாக தெரிவித்துள்ளர். இதுகுறித்து பேசிய அவர், “மூத்த வீரர்கள், பயிற்சியாளர்கள், வழிகாட்டிகள் என நிறைய பேருடன் பணியாற்றியதன் மூலம் நான் மிகவும் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன். அதிலும், மறைந்த தோர்பேவும் எனக்கு பல சலுகைகளை வழங்கியுள்ளார். 

இந்த நேரத்தில் அவரை (தோர்ப்) நினைத்துப் பார்க்க முடிந்தது மகிழ்ச்சியாக இருந்தது. நான் மிகவும் தவறவிடப் போகிற நபர்களில் அவரும் ஒருவர், மேலும் நான் அவருக்கு நிறைய கடன்பட்டிருக்கிறேன். அவர் எனது விளையாட்டிலும், எனது தொழிலிலும் நிறைய ஆலோசனைகளை வழங்கியுள்ளார். அவருடைய உதவி இல்லாமல் நான் இப்போது இருக்கும் இடத்தில் நிச்சயமாக இருந்திருக்க முடியாது என்பது எனக்கு தெரியும். 

நான் அழுத்தத்தில் இருந்த சமயத்தில் அவரிடம் எனது சொந்த விளையாட்டைப் பற்றி பேசும் போது எனக்கு சில புரிதல்கள் கிடைத்தன. அதன்மூலம் எனது ஆட்டத்திலும் நாளுக்கு நாள் முன்னேற்றத்தை கண்டேன். மேலும் நாங்கள் இருவரும் நல்ல நண்பர்களாக இருந்தோம், அவருடன் நிறைய நேரம் செலவழிப்பதை நான் மிகவும் ரசித்தேன். இந்த சதத்தின் மூலம் அவருக்கு  சிறு அஞ்சலி செலுத்தியது மகிழ்ச்சியாக இருந்தது” என்று தெரிவித்துள்ளர். 

Also Read: Funding To Save Test Cricket

இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரும் பயிற்சியாளருமான கிரஹாம் தோர்ப் கடந்த ஆகஸ்ட் 05ஆம் தேதி காலமானார். இங்கிலாந்து அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகளிலும், 82 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ள இவர், டெஸ்ட் கிரிக்கெட்டில் 6,744 ரன்களையும், ஒருநாள் போட்டிகளில் 2,380 ரன்களையும் குவித்திருக்கிறார். மேலும் இவர் இங்கிலாந்து அணியின் கேப்டனாவும், பயிற்சியாளராகவும் செயல்பட்டுள்ளார் என்பதும் நினைவு கூறத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை