ஒன்றாக இணைந்து கோப்பையை வெல்வோம் - டிசி அணி குறித்து கேஎல் ராகுல்!
ஐபிஎல் தொடரானது வெற்றிகரமாக 17 சீசன்களை கடந்து, 18ஆவது சீசனில் அடியெடுத்து வைக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் எதிர்வரும் ஐபிஎல் 18ஆவது சீசனுக்கான வீரர்கள் மெகா ஏலமானது கடந்த இரு தினங்களாக சௌதீ அரேபியாவில் உள்ள ஜித்தா நகரில் நடைபெற்றது. அந்தவகையில் நடைபெற்று முடிந்த வீரர்களுக்கான மெகா ஏலத்தில் அதிகபட்சமாக இந்திய அணியைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் ரிஷப் பந்தை ரூ.27 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.
அதற்கு முன்னர் இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயரை ரூ.26.76 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணிஏலம் எடுத்திருந்தது. இதன்மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்கள் எனும் சாதனைகளையும் படைத்தனர். இதுதவிர்த்து, யாரும் எதிா்பாராத வகையில் இந்திய வீரா் வெங்கடேஷ் ஐயா் ரூ.23.75 கோடிக்கு கொல்கத்தா அணியால் வாங்கப்பட்டாா். 13வயதே ஆன இந்திய அணியில் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.
இதன்மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் மிக இளம் வயதில் விளையாடும் வீரர் எனும் சாதனையையும் படைத்துள்ளார். அதேசமயம் நட்சத்திர வீரர்களாக பார்க்கப்பட்ட டேவிட் வார்னர், பிரித்வி ஷா, கேன் வில்லியம்சன், டேரில் மிட்செல், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்க ஆர்வம் காட்டவில்லை. இந்நிலையில் இந்த ஏலத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேஎல் ராகுலை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.
முன்னதாக கடந்த 2022ஆம் ஆண்டு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் தேர்வுசெய்யப்பட்ட கேஎல் ராகுல் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த நிலையில், கடந்தாண்டு அணியின் உரிமியாளர் - கேஎல் ராகுல் இடையே விரிசல் ஏற்பட்டது. இதனையடுத்து லக்னோ அணி கேஎல் ராகுலை ஏலத்திற்கு முன்னதாகவே அணியில் இருந்து விடுவித்தது. இந்நிலையில் தான் நடந்து முடிந்த வீரர்கள் ஏலத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியானது கேஎல் ராகுலை ஏலத்தில் எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் டேல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இணைந்தது பற்றி கேஎல் ராகுல் பேசிய சில விசயங்களை டெல்லி அணி உரிமையாளர் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “ராகுல் என்னிடம் ‘நான் கிரிக்கெட் விளையாட விரும்புகிறேன். உரிமையாளரிடம் இருந்து அன்பையும் ஆதரவையும் பெற விரும்புகிறேன். மரியாதையைப் பெற விரும்புகிறேன், பார்த் உங்களிடமிருந்து நான் அதைப் பெறுவேன் என்பது எனக்குத் தெரியும். ஒரு நண்பருக்காக விளையாடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
Also Read: Funding To Save Test Cricket
நான் ஐபிஎல் கோப்பையை ஒருபோதும் வென்றதில்லை. டெல்லி கேப்பிடல்ஸும் ஒருபோதும் ஐபிஎல் கோப்பையை வென்றதில்லை. அதனால் இம்முறை இருவரும் ஒன்றிணைந்து கோப்பையை வெல்லலாம்’என்று அவர் தன்னிடம் கூறினார்” என தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் கேஎல் ராகுல் இதுவரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன்ரைசர்ஸ் ஹைதராபாத், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்காக விளையாடிய நிலையிலும், இதுவரை கோப்பையை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.