ரிங்கு சிங்கிற்காகவே நான் இந்திய தொடரை பார்க்கிறேன் - ஆண்ட்ரே ரஸல்!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டு அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பைக்காக இளம் வீரர்களை வைத்து புதிய அணியை கட்டமைக்கப்பட்டு அந்த அணியே இந்த தொடரில் விளையாடி வருகிறது.
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்தியா அணியில் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு புதிய நம்பிக்கையை பிசிசிஐ வீரர்களிடையே விதைத்துள்ளது. அந்த வகையில் இந்திய அணியும் தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்று வரும் டி20 தொடரில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
அந்த வகையில் நேற்று ராய்ப்பூர் நகரில் நடைபெற்ற நான்காவது போட்டியிலும் வெற்றி பெற்ற இந்திய அணியானது இந்த தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இவ்வேளையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இந்த டி20 தொடரினை ரிங்கு சிங்கிற்காகவே தான் பார்த்து வருவதாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி வீரரான ஆண்ட்ரே ரஸல் தெரிவித்துள்ளார்.
ரின்கு சிங்கின் பினிஷிங் திறமை குறித்து பேசியிருக்கும் ஆண்ட்ரே ரஸல், “நான் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே நடைபெற்று வரும் டி20 போட்டிகளை பார்த்து வருகிறேன். ஒருவேளை போட்டியை தவறவிட்டால் ஹைலைட்ஸ் பார்ப்பதை தவறவிடுவதில்லை. அது பெரும்பாலும் ரின்கு சிங்கின் பேட்டிங்கை பார்ப்பதற்காகத்தான். ரின்கு சிங் தற்போது இந்திய அணியில் சிறப்பாக செயல்பட்டு வருவதில் எனக்கு ஆச்சரியமில்லை.
அவர் சில வருடங்களுக்கு முன்பு கேகேஆர்-ல் இணைந்தபோது, அவருடைய பேட்டிங் திறனையும் ஹிட்டிங் அதிரடியையும் வலையில் பார்த்தோம். அவர் பெரிய ஷாட்களை க்ளீன் ஹிட்டாக அடிப்பார். தற்போது அவருக்கு பெரிய மேடையில் வாய்ப்பு கிடைத்து சிறப்பாக செயல்படுவது, கடைசிநேரத்தில் ஒரு பினிசராக இறங்கி ஆட்டங்களை முடித்து கொடுப்பதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. அவருடைய இந்த பேட்டிங் ஒவ்வொரு வீரரும் விரும்பும் தன்னம்பிக்கையை அவருக்கு தருகிறது.
ரின்கு ஒரு அற்புதமான டீம் மேன், நீல நிறத்தை அணிவதிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். மேலும் தொடர்ந்து முன்னேறி, ஆண்டுகள் செல்ல செல்ல தலைசிறந்த வீரராக உருமாறுவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் ரின்கு சிங் போன்ற வீரருடன் சேர்ந்து விளையாடுவது எப்போதுமே சிறப்பானது. அவர் என்னுடைய நம்பிக்கையை அதிகமாக்குகிறார். எதிர்வரும் ஐபிஎல் மற்றும் டி20 உலகக்கோப்பையில் விளையாடுவதற்கு அதிக ஆர்வத்துடன் இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.