நான் வெற்றிகரமான கேப்டன் இல்லை என்று கூறினார்கள்- விராட் கோலி!

Updated: Sat, Feb 25 2023 16:27 IST
Image Source: Google

இந்தியாவிற்காக பல வெற்றிகளை பெற்றுத் தந்துள்ளேன், ஐசிசி தொடர்களில் இறுதிப் போட்டிகள் வரை அழைத்துச் சென்று இருக்கிறேன் ஆனாலும் நான் வெற்றிகரமான கேப்டன் இல்லை என்று கூறினார்கள் என விராட் கோலி வருத்தத்துடன் பேசியுள்ளார்.

மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணி ஐசிசி-யின் அனைத்து கோப்பைகளையும் பெற்றது. இதன் மூலம் புதிய சாதனையையும் தோனி படைத்தார். தோனி, கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய பிறகு, அந்த பொறுப்பிற்கு விராட் கோலி வந்தார். இவர் மீது எதிர்பார்ப்பும் அதிகமாக இருந்தது. ஆனால் எந்தவித ஐசிசி கோப்பையையும் பெற்றுத் தரவில்லை. இதனால் கோலி வெற்றிகரமான கேப்டன் இல்லை என்று விமர்சிக்கப்பட்டார்.

ஆனாலும் விராட் கோலி தலைமையில் சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டி வரை சென்றது இந்திய அணி. ஒருநாள் உலகக் கோப்பையில் அரையிறுதி போட்டி வரை சென்றது. ஐந்து முறை டெஸ்ட் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தையும் பிடித்து, மேஸ் கோப்பையை பெற்றது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி வரை சென்றது.

இப்படி அணியை பல்வேறு உயரத்திற்கு எடுத்துச் சென்று இருக்கிறார் விராட் கோலி. கோப்பையை வெல்லவில்லை என்று காரணமாக காட்டி அவர் வெற்றிகரமான கேப்டன் இல்லை என்று விமர்சித்ததை பற்றி சமீபத்தில் அளித்த பேட்டியில் விராட் கோலியே பேசியுள்ளார்.

அதில் பேசிய அவர், “என்னை வெற்றிகரமான கேப்டன் இல்லை என்கிறார்கள். என் தலைமையில் டெஸ்ட் தர வரிசையில் ஐந்து முறை நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்ததற்காக கோப்பை கொடுக்கப்பட்டது. சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டி வரை சென்று இருக்கிறோம். 2019 ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் கோப்பைக்கு எவ்வளவு நெருக்கமாக சென்றோம். 

துரதிஷ்டவசமாக அரையிறுதி போட்டியில் வெளியேறிவிட்டோம். கேப்டனாக நான் அணியை நன்றாக வழிநடத்தி இருக்கிறேன். அதை ரசிகர்கள் உணருகிறார்கள். அந்த வகையில் எனக்கு மகிழ்ச்சி. வேறு எவரின் பாராட்டு பத்திரமும் எனக்கு தேவை இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை