ஐசிசி உலகக்கோப்பை 2023: குர்பாஸ், அலிகில் அரைசதம்; இங்கிலாந்துக்கு 285 டார்கெட்!

Updated: Sun, Oct 15 2023 17:46 IST
Image Source: Google

ஐசிசியின் நடப்பு  ஒருநாள் உலகக் கோப்பைத் தொடர் இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற 13ஆவது போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

அதன்படி களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணிக்கு ரஹ்மனுல்லா குர்பாஸ் - இப்ராஹிம் ஸத்ரான் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடக்கம் கொடுத்து அடித்தளம் அமைத்துக்கொடுத்தனர். அதிலும் ஆரம்பம் முதலே பவுண்டரியும் சிக்சர்களுமாக விளாசித்தள்ளிய ரஹ்மனுல்லா குர்பாஸ் 35 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். 

மேலும் இவர்கள் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 114 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அதன்பின் 28 ரன்களில் இப்ராஹிம் ஸத்ரான் தனது விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ரஹ்மத் ஷாவும் 3 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். இதையடுத்து சதத்தை நெருங்கிய ரஹ்மனுல்லா குர்பாஸ் 8 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 80 ரன்கள் எடுத்த நிலையில் கேப்டன் ஹஸ்மதுல்லா ஷாஹிதியின் தவறான அழைப்பால் ரன் அவுட்டாகி சதமடிக்கும் வாய்ப்பை இழந்தார்.

அதன்பின் களமிறங்கிய அதிரடியாக விளையாடிய அஸ்மதுல்லா ஒமர்ஸாய் 19 ரன்களுக்கும், கேப்டன் ஹஸ்மதுலா ஷாஹிதி 14 ரன்களுக்கும், முகம்து நபி 9 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்தனர். இதையடுத்து இணைந்த இக்ரம் அலிகில் ரஷித் கான் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.

இதில் 3 பவுண்டரிகளுடன் 23 ரன்களை எடுத்திருந்த ரஷித் கான் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த முஜீப் உர் ரஹ்மானும் பவுண்டரிகளை விளாசி ஸ்கோரை உயர்த்தினார். அதேசமயம் மறுபக்கம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய இக்ரம் அலிகில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். பின் 3 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 58 ரன்களை எடுத்திருந்த இக்ரம் அலிகில்லும், 3 பவுண்டரி, ஒரு சிக்சர் என 28 ரன்களை எடுத்திருந்த முஜீப் உர் ரஹ்மானும் அடுத்தடுத்த பந்துகளில் தங்களது விக்கெட்டை இழந்தனர்.

இதனால் 49.5 ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளை இழந்து 284 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக ஆதில் ரஷித் 3 விக்கெட்டுகளையும், மார்க் வுட் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை