ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் லீக் போட்டிகள் நாளுக்கு நாள் விறுவிறுப்பை கூட்டிவருகிறது. இதில் இன்று நடைபெற்ற 24அவது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டெல்லியிலுள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

Advertisement

அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு டேவிட் வார்னர் - மிட்செல் மார்ஷ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாட முயன்ற மிட்செல் மார்ஷ் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் டேவிட் வார்னருடன் இணைந்த ஸ்டீவ் ஸ்மித் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

Advertisement

இதில் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். அதன்பின் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஸ்டீவ் ஸ்மித் 9 பவுண்டரி, ஒரு சிக்சர் என 71 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய மார்னஸ் லபுஷாக்னேவும் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்தார். பின் 7 பவுண்டரி, 2 சிக்சர்கள் என லபுஷாக்னேவும் தனது விக்கெட்டை இழந்தார். 

இருப்பினும் மறுபக்கம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டேவிட் வார்னர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 22ஆவது சதத்தைப் பதிவுசெய்த நிலையில், 11 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 104 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய ஜோஷ் இங்கிலிஸ், கேமரூன் க்ரீன் ஆகியோரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையை கட்டினர். 

ஆனால் அடுத்து களமிறங்கிய நட்சத்திர வீரர் கிளென் மேக்ஸ்வெல் அடுத்தடுத்து பவுண்டரியும், சிக்சர்களுமாக விளாசி 27 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.  அதன்பின்னும் அதிரடியை நிறுத்ததாத கிளென் மேக்ஸ்வெல் 40 பந்துகளில் தனது சதத்தைப் பதிவுசெய்து மிரட்டினார். இதன்மூலம் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் மிக குறைந்த பந்தில் சதமடித்த வீரர் எனும் ஐடன் மார்க்ரமின் சாதனையை கிளென் மேக்ஸ்வெல் முறியடித்து அசத்தினார். 

அதன்பின் 44 பந்துகளில் 9 பவுண்டரி, 8 சிக்சர்கள் என 106 ரன்கள் எடுத்திருந்த கிளென் மேக்ஸ்வெல் தனது விக்கெட்டை இழந்தார். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 399 ரன்களைக் குவித்தது. நெதர்லாந்து அணி தரப்பில் லோகன் வான் பீக் 3 விக்கெட்டுகளையும், பாஸ் டி லீட் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News