ஐசிசி உலகக்கோப்பை 2023: பேட்டிங், பவுலிங்கில் கலக்கிய மெஹிதி; ஆஃப்கானை வீழ்த்தியது வங்கதேசம்!

Updated: Sat, Oct 07 2023 16:22 IST
ஐசிசி உலகக்கோப்பை 2023: பேட்டிங், பவுலிங்கில் கலக்கிய மெஹிதி; ஆஃப்கானை வீழ்த்தியது வங்கதேசம்! (Image Source: Google)

ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்றுவரும் 3ஆவது லீக் ஆட்டத்தில் வங்கதேசம் மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச தீர்மானித்து ஆஃப்கானிஸ்தானை பேட்டிங் செய்ய அழைத்தது.

அதன்படி களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணிக்கு ரஹ்மனுல்லா குர்பாஸ் - இப்ரஹிம் ஸத்ரான் இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் இப்ராஹிம் ஸத்ரான் 22 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ரஹ்மத் ஷா 18, கேப்டன் ஹஸ்மதுல்லா ஷாஹிதி 18 என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தார். 

அதேசமயம் மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரஹ்மனுல்லா குர்பாஸ் 47 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அதனைத்தொடர்ந்து களமிறங்கிய நஜிபுல்லா ஸத்ரான், முகமது நபி, அஸ்மதுல்லா ஒமர்ஸாய், ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான் ஆகியோராலும் வங்கதேச அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்தனர். 

இதனால் ஆஃப்கானிஸ்தான் அணி 37.2 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 156 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வங்கதேச அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய கேப்டன் ஷாகிப் அல் ஹசன், மெஹிதி ஹசன் தலா 3 விக்கெட்டுகளையும், ஷொரிஃபுல் இஸ்லாம் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.

இதையடுத்து எளிய இலகை நோக்கி களமிறங்கிய வங்கதேச அணிக்கு லிட்டன் தாஸ் மற்றும் தன்ஸித் ஹசன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் தன்ஸித் ஹசன் 5 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட்டாகி பெவிலியன் திரும்ப, அவரைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான லிட்டன் தஸும் 13 ரன்களுக்கு விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.

பின்னர் ஜோடி சேர்ந்த மெஹிதி ஹசன் மிராஸ் - நஜ்முல் ஹொசைன் சாண்டோ இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய மெஹிதி ஹசன் மிராஸ் அரைசதம் கடந்த கையோடு 57 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார். அவரைத் தொடர்ந்து கேப்டன் ஷாகிப் அல் ஹசனும் 14 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார்.

இருப்பினும் மறுபக்கம் இறுதிவரை களத்தில் இருந்த நஜ்முல் ஹொசைன் அரைசதம் கடந்ததுடன் 59 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் வங்கதேச அணி 34.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை