ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற 15ஆவது லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. தர்மசாலாவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

Advertisement

மழை காரணமாக தமதமான இந்த போட்டி 43 ஓவர்களாக குறைக்கப்பட்டது. அதன்படி களமிறங்கிய நெதர்லாந்து அணிக்கு விக்ரம்ஜித் சிங் - மேக்ஸ் ஓடவுட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் விக்ரம்ஜித் சிங் 2 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து அதிரடியாக விளையாட முயன்ற மேக்ஸ் ஓடவுட் 18 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். 

Advertisement

அதன்பின் வந்த நட்சத்திர வீரர்கள் காலின் அக்கர்மேன் 13, பாஸ் டி லீட் 2, ஏங்கல்பெர்ட் 19 என அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த தேஜா நிடமனுரு 20 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய அதிரடி வீரர் லோகன் வான் பிக்கும் 10 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழந்தார்.

இதையடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் - வென்டர் மெர்வ் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் ஒருநாள் உலகக்கோப்பை தொடர்களில் தனது முதல் அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.

அதேசமயம் அதிரடியாக விளையாடி வந்த வான்டர் மெர்வ் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் என 29 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். இருப்பினும் எட்டாவது விக்கெட்டிற்கு இந்த இணை 64 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். ஆனால் அடுத்து களமிறங்கிய ஆர்யன் தத் இரண்டு இமாலய சிக்சர்களை பறக்கவிட்டு அணியின் ஸ்கோரை உயர்த்தினார். 

இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் 10 பவுண்டரி, ஒரு சிக்சர் என 78 ரன்களையும், ஆர்யன் தத் 3 சிக்சர்கள் உள்பட 23 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் நெதர்லாந்து அணி 43 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 245 ரன்களைச் சேர்த்தது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் லுங்கி இங்கிடி, காகிசோ ரபாடா, மார்கோ ஜான்சென் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.   

Advertisement

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு கேப்டன் டெம்பா பவுமா - குயின்டன் டி காக் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அடித்தளம் அமைத்தனர். இதில் டி காக் 20 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து கேப்டன் டெம்பா பவுமாவும் 16 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழந்தார்.   

அதன்பின் தான் தென் ஆப்பிரிக்க அணிக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. இத்தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரஸ்ஸி வேண்டர் டுசென் 4, ஐடன் மார்க்ரம் 1, ஹென்ரிச் கிளாசென் 28, மார்கோ ஜான்சென் 9 என அடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்ப தென் ஆப்பிரிக்க அணி 109 ரன்களுக்கே 6 விக்கெட்டுகளை இழந்து ஆட்டம் கண்டது.

அதன்பின் இணைந்த டேவிட் மில்லார் - ஜெரால்ட் கோட்ஸி இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை சீரான வேகத்தில் உயர்த்தினர். இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட டேவிட் மில்லர் 4 பவுண்டரி, ஒரு சிக்சர் என 43 ரன்களிலும், ஜெரால்ட் கோட்ஸி 22 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, தென் ஆப்பிரிக்க அணியின் தோல்வியும் உறுதியானது.  

Advertisement

இறுதியில் தென் ஆப்பிரிக்க அணி 42.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 207 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நெதர்லாந்து அணி தரப்பில் பாஸ் டி லீட் 3 விக்கெட்டுகளையும், லோகன் வான் பீக், பால் வான் மீகெரன், வான்டெர் மொர்வ் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினர். இதன்மூலம் நெதர்லாந்து அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி நடப்பு உலகக்கோப்பை தொடரில் தங்களது முதல் வெற்றியைப் பதிவுசெய்துள்ள்ளது.   

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News