ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற 7ஆவது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் வங்கதேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்திவருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.
அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஜானி பேர்ஸ்டோவ் - டேவிட் மாலன் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் இணைந்து அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்ததுடன் அரைசதம் கடந்தும் அசத்தினர். பின் 52 ரன்கள் எடுத்த நிலையில் ஜானி பேர்ஸ்டோவ் தனது விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார்.
அடுத்து களமிறங்கிய ஜோ ரூட்டும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. அதேசமயம் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டேவிட் மாலன் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 6ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதன்பின் 16 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 140 ரன்களை விளாசிய டேவிட் மாலன் ஆட்டமிழந்தார்.
அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ஜோஸ் பட்லரும் 20 ரன்களுக்கு ஆட்டமிழக்க, மறுபக்கம் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜோ ரூட் 8 பவுண்டரி, ஒரு சிக்சர் என 82 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்தவந்த லியாம் லிவிங்ஸ்டோனும் அடுத்த பந்திலேயே பெவிலியன் திரும்ப, ஹாரி ப்ரூக், சாம் கரண் போன்ற அதிரடி வீரர்களும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர்.
இறுதியில் கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட் ஆகியோர் ஒரு சில பவுண்டரிகளை அடிக்க, இங்கிலாந்து அணி 9 விக்கெட்டுகளை இழந்து 364 ரன்களைச் சேர்த்தது. வங்கதேச அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய மஹெதி ஹசன் 4 விக்கெட்டுகளையும், ஷொரிஃபுல் இஸ்லாம் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.