ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்ற 22ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்தது.

Advertisement

அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு அப்துல்லா ஷஃபிக் - இமாம் உல் ஹக் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி இமாம் உல் ஹக் 17 ரன்கள் எடுத்த நிலையில் தது விக்கெட்டை இழந்தார். பின்னர் ஷஃபிக்குடன் ஜோடி சேர்ந்த கேப்டன் பாபர் ஆசாம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினார். 

Advertisement

அதேசமயம் அதிரடியாக விளையாடி வந்த அப்துல்லா ஷஃபிக் தனது அரைசதத்தைப் பதிவுசெய்த கையோடு 5 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 58 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய முகமது ரிஸ்வான் அதிரடியாக இன்னிங்ஸைத் தொடங்கினாலும், 8 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். 

இருப்பினும் இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் பாபர் ஆசாம் அரைசதம் கடந்தார். அதேசமயம் மறுமுனையில் களமிறங்கிய சௌத் சகீல் 25 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க,  அதுவரை விளையாடிய கேப்டன் பாபர் ஆசாமும் 4 பவுண்டரி, ஒரு சிக்சர் என 74 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். 

இதனையடுத்து இணைந்த ஷதாப் கான் - இஃப்திகார் அஹ்மத் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் இஃப்திகார் அஹ்மத்  2 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 40 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஷதாப் கான் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் என 40 ரன்களைச் சேர்த்தார். 

இதன்மூலம் பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 282 ரன்களைச் சேர்த்தது. ஆஃப்கானிஸ்தான் அணி தரப்பில் நூர் அஹ்மத் 3 விக்கெட்டுகளையும், நவீன் உல் ஹ்க் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். 

Advertisement

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணிக்கு இப்ராஹிம் ஸத்ரான் - ரஹ்மனுல்லா குர்பாஸ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு அடித்தளம் அமைத்தனர். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்ததுடன், முதல் விக்கெட்டிற்கு 130 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர்.

அதன்பின் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரஹ்மனுல்லா குர்பாஸ் 9 பவுண்டரி ஒரு சிக்சர் என 65 ரன்கள் எடுத்த நிலையில் ஷாஹீன் அஃப்ரிடி பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மற்றொரு தொடக்க வீரர் இப்ராஹிம் ஸத்ரான் 10 பவுண்டரிகளுடன் 83 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.

இதையடுத்து ஜோடி சேர்ந்த ரஹ்மத் ஷா - கேப்டன் ஹஸ்மதுல்லா ஷாஹிதி இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினார். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரஹ்மத் ஷா தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தியதுடன் அணியின் வெற்றியையும் உறுதிசெய்தார்.

Advertisement

இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரஹ்மத் ஷா 5 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 75 ரன்களுடனும், கேப்டன் ஹஸ்மதுலா ஷாஹிதி 4 பவுண்டரிகளுடன் 48 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர்.

இதன்மூலம் ஆஃப்கானிஸ்தான் அணி 49 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. மேலும் உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக தங்களது முதல் வெற்றியைப் பதிவுசெய்து ஆஃப்கானிஸ்தான் அணி அசத்தியுள்ளது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News