ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் கோலாகமாக நடைபெற்றுவருகிறது. இதில் உலக கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று அஹ்மதாபாத்திலுள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.

Advertisement

அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு அப்துல்லா ஷஃபீக் - இமாம் உல் ஹக் கூட்டணி தொடக்க வீரர்களாக களமிறங்கியது. முதல் விக்கெட்டுக்கு 41 ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில், அப்துல்லா ஷஃபீக் சிராஜ் பந்துவீச்சில் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன்பின் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா உடனடியாக ஹர்திக் பாண்டியாவை அட்டாக்கில் கொண்டு வந்தார். 

Advertisement

ஒரு பக்கம் பாபர் அசாம் நிதானமாக பேட்டிங் செய்ய, இன்னொரு பக்கம் இமாம் உல் ஹக் அதிரடியாக சில பவுண்டரிகளை விளாசி தள்ளினார். அதன்பின் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட இமாம் உல் ஹக் 36 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். இதையடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் பாபர் ஆசாம் - முகமது ரிஸ்வான் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன் அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர்.

இப்போட்டியில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் அரைசதம் கடந்த நிலையில் 50 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய சௌத் சகீல் 6 ரன்களுக்கும், இஃப்திகார் அஹ்மத் 4 ரன்களுக்கும் என அடுத்தடுத்து குல்தீப் யாதவ் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தனர். அவர்களைத்தொடர்ந்து அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட முகமது ரிஸ்வானும் 49 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

அதன்பின் ஷதாப் கான், முகமது நவாஸ், ஹசன் அலி, ஹாரிஸ் ராவுஃப் ஆகியோரும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால் பாகிஸ்தான் அணி 191 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளைய்ம் இழந்து ஆல் அவுட்டானது. அதிலும் குறிப்பாக 155 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்த பாகிஸ்தான் அணி அடுத்த 35 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஏமாற்றத்தைக் கொடுத்தது.

இந்திய அணி தரப்பில் ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது சிராஜ், ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினர். இதையடுத்து 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ர எளிய இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்கவுள்ளது.

Advertisement

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா - ஷுப்மன் கில் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் அதிர்டையாக விளையாடி வந்த ஷுப்மன் கில் 16 ரன்கள் எடுத்த நிலையில் ஷாஹின் அஃப்ரிடி பந்துவீச்சில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய விராட் கோலியும் 16 ரன்களை எடுத்த நிலையில் ஹசன் ஹலி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

இருப்பினும் மறுபக்கம் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த கேப்டன் ரோஹித் சர்மா 36 பந்துகளில் தனது அரைசதத்தை பதிவுசெய்து அசத்தினார். அதன்பின் சதத்தை நோக்கி நகர்ந்த ரோஹித் சர்மா 6 பவுண்டரி, 6 சிக்சர்கள் என 86 ரன்களைச் சேர்த்த நிலையில் ஷாஹின் அஃப்ரிடி பந்துவீச்சில் விக்கெட்டை இழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.   

அதேசமயம் மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த ஸ்ரேயாஸ் ஐயர் தனது அரைசதத்தைப் பதிவுசெய்ததுடன் அணியை வெற்றிக்கும் அழைத்துச்சென்றார். இதன்மூலம் இந்திய அணி 30.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் தொடர்ச்சியாக 8ஆவது முறையாக பாகிஸ்தானை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.  

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News