கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 2023 ஆம் ஆண்டுக்கான ஒருநாள் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இதில் இன்று நடைபெற்ற 5ஆவது லீக் ஆட்டத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் பலப்பரீட்சை நடத்தின. 

Advertisement

சென்னை செப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு மிட்செல் மார்ஷ் - டேவிட் வார்னர் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் மிட்செல் மார்ஷ் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து எமாற்றமளித்தார்.

Advertisement

அதன்பின் இணைந்த டேவிட் வார்னர் - ஸ்டீவ் ஸ்மித் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுதன் அணியின் ஸ்கோரையும் சீரான வேகத்தில் உயர்த்தினர். இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட டேவிட் வார்னர் 41 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து 46 ரன்கள் எடுத்திருந்த ஸ்டீவ் ஸ்மித்தும் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.

அவர்களைத் தொடர்ந்து வந்த மார்னஸ் லபுஷாக்னே 27 ரன்களுக்கும், அலெக்ஸ் கேரி ரன்கள் ஏதுமின்றியும் என ரவீந்திர ஜடேஜா பந்துவீச்சில் அடுத்தடுத்து பந்துக்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கிளென் மேக்ஸ்வெல் 15 ரன்களுக்கும், கேமரூன் க்ரீன் 8 ரன்களுக்கும் என ஆட்டமிழக்க, கேப்டன் பாட் கம்மின்ஸும் 15 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.

இறுதியில் மிட்செல் ஸ்டார்க் ஒருசில பவுண்டரிகளை விளாசி 28 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். இதனால் ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 199 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், ஜஸ்ப்ரித் பும்ரா, குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு முதலிரண்டு ஓவர்களிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. இந்திய அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய இஷான் கிஷான், மிட்செல் ஸ்டார்க் வீசிய முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அதன்பின் இரண்டாவது ஓவரை வீசிய ஜோஷ் ஹசில்வுட் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரது விக்கெட்டுகளை கைப்பற்றி அதிர்ச்சிகொடுத்தார். 

Advertisement

அதன்பின் ஜோடி சேர்ந்த இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் இணை தங்களது பொறுப்பை உணர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினர். இதில் விராட் கோலி 12 ரன்கள் எடுத்த நிலையில் கொடுத்த கேட்ச் வாய்ப்பை மிட்செல் மார்ஷ் தவறவிட்டார். 

தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திய விராட் கோலி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை சீரான வேகத்தில் உயர்த்தினார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி அரைசதம் கடக்க, மறுபக்கம் அவருக்கு துணையாக விளையாடி வந்த கேஎல் ராகுலும் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.

இவர்கள் இருவரும் இணைந்து 5ஆவது விக்கெட் பார்ட்னர்ஷிப்பாக 150 ரன்களையும் கடந்து அசத்தினார். அதன்பின் இப்போட்டியில் தனது 48ஆவது ஒருநாள் சதத்தைப் பதிவுசெய்வார் என எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 85 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இருப்பினும் இந்திய அணி 2 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது தனது பொறுப்பை உணர்ந்து விராட் கோலி விளையாடியது ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றது.

Advertisement

அதன்பின் களமிறங்கிய ஹர்திக் பாண்டியா தனது பங்கிற்கு ஒரு சிக்சரை விளாச, மறுபக்கம் அதுவரை நிதாம் காத்த கேஎல் ராகுலும் பவுண்டரிகளை விளாசி 97 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியையும் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் இந்திய அணி 41.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News