ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்றுவரும் 2ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. ஹைதராபாத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு ஃபகர் ஸமான் - இமாம் உல் ஹக் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஃபகர் ஸமான் 12 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து கேப்டன் பாபர் ஆசாமும் 5 ரன்களுக்கு விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். இவர்களைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான இமாம் உல் ஹக்கும் 15 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.

Advertisement

பின்னர் ஜோடி சேர்ந்த முகமது ரிஸ்வான் - சௌத் சகீல் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன், விக்கெட் இழப்பையும் தடுத்தனர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய முகமது ரிஸ்வான் மற்றும் சௌத் சகீல் ஆகியோர் தங்களது முதல் உலகக்கோப்பை சதத்தைப் பதிவுசெய்து அசத்தினர். 

அதன்பின் 9 பவுண்டரி, ஒரு சிக்சர் என சௌத் சகீல் 68 ரன்களுக்கும், முகமது ரிஸ்வான் 8 பவுண்டரிகளுடன் 68 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய இஃப்திகார் அஹ்மதும் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இதையடுத்து ஜோடி சேர்ந்த ஷதாப் கான் - முகமது நவாஸ் இணை ஓரளவு தாக்குப்பிடித்து 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஷதாப் கான் 32 ரன்களுக்கும், அடுத்து வந்த ஹசல் அலி முதல் பந்திலேயும் என அடுத்தடுத்து பாஸ் டி லீ பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தனர். 

அவர்களைத் தொடர்ந்து அணியின் நம்பிக்கையாக பார்க்கப்பட்ட முகமது நவாஸ் 39 ரன்கள் எடுத்த நிலையில் தேவையில்லாமல் ரன் அவுட்டாகி பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.  அதன்பின் வந்த ஷாஹீன் அஃப்ரிடி 13 ரன்களையும், ஹாரிஸ் ராவுஃப் 16 ரன்களையும் எடுக்க பாகிஸ்தான் அணி 286 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நெதர்லாந்து அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய பாஸ் டி லீட் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

இதையடுத்து களமிறங்கிய நெதர்லாந்து அணிக்கு விக்ரம்ஜித் சிங் - மேக்ஸ் ஓடவுட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் மேக்ஸ் ஓடவுட்  5 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய காலின் அக்கர்மேன் 17 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த விக்ரம்ஜித் சிங் - பாஸ் டி லீட் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 

Advertisement

இதில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய விக்ரம்ஜித் சிங் அரைசதம் கடந்த கையோடு 52 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாஸ் டி லீட் அரைசதம் கடந்தார். அதன்பின் களமிறங்கிய தேஜா நிடமானுரு, கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ், சாகிப் சுல்ஃபிகர் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அணியின் நம்பிக்கையாக பார்க்கப்பட்ட பாஸ் டி லீட் 67 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

அதைத்தொடர்ந்து வந்த வாண்டர் மோர்வ், ஆர்யன் தத் ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய வீரர்களாலும் இலக்கை எட்ட முடியாததால், நெதர்லாந்து அணி 41 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 205 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பாகிஸ்தான் தரப்பில் ஹாரிஸ் ராவூஃப் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன்மூலம் பாகிஸ்தான் அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தி தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News