ஐசிசி தரவரிசை: அஸ்வின், ஸ்ரேயாஸ் ஐயர் முன்னேற்றம்; தொடர் பின்னடைவில் விராட் கோலி!

Updated: Wed, Dec 28 2022 19:50 IST
ICC Test Rankings: Ashwin Moves Up To Joint Fourth, Iyer Attains Career-best 16th Spot (Image Source: Google)

வங்கதேசத்துக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் கைப்பற்றியது. இதில் அஸ்வின், ஸ்ரேயாஸ் ஐயர் , ரிஷப் பந்த் உள்ளிட்ட வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர். இதன் காரணமாக ஐசிசி டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசையில் இந்திய வீரர்கள் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.

இரண்டாவது டெஸ்டில் அஸ்வின் ஆறு விக்கெட்டுகள் மற்றும் 42 ரன்கள் சேர்த்து 145 ரன்கள் என்ற இலக்கை வெற்றிகரமாக இந்தியா எட்ட உதவினார். இதன் மூலம் அஸ்வின் பந்துவீச்சாளர்களுக்கான டெஸ்ட் தரவரிசை பட்டியலில் ஒரு இடம் முன்னேறி நான்காவது இடத்தை சக வீரரான பும்ராவுடன் பகிர்ந்து கொண்டு உள்ளார்.

டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான பட்டியலில் முதலிடத்தில் பாட் கம்மின்ஸ் , இரண்டாவது இடத்தில் ஜேம்ஸ் ஆண்டர்சன் ,மூன்றாவது இடத்தில் ரபாடாவும் உள்ளனர். ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசை பட்டியலில் அஸ்வின் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் நீடிக்கிறார். டெஸ்ட் போட்டியில் இடம் பெறாத ரவீந்திர ஜடேஜா தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறார்.

இதேபோன்று அஸ்வின் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் மூன்று இடம் முன்னேறி 84 ஆவது இடத்தில் இருக்கிறார். இதேபோன்று இந்திய அணியின் நட்சத்திர வீரரான ஸ்ரேயாஸ் ஐயரும் தரவரிசை பட்டியலில் முன்னேற்றம் கண்டுள்ளார். இரண்டாவது டெஸ்டில் முதல் இன்னிங்சில் ஸ்ரேயாஸ் ஐயர் 87 ரன்கள் எடுத்தார். இதனைத்தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சில் ஆட்டம் இழக்காமல் 29 ரன்கள் சேர்த்தார்.

இதன் மூலம் ஸ்ரேயாஸ் , டெஸ்ட் பேட்ஸ்மேனுக்கான தரவரிசை பட்டியலில் 10 இடங்கள் முன்னேறி 16ஆவது இடத்தை பிடித்திருக்கிறார். இதேபோன்று பேட்டிங்கில் கலக்கிய ரிஷப் பந்த் ஆறாவது இடத்திலும், ரோகித் சர்மா ஒன்பதாவது இடத்திலும், வங்கதேச தொடரில் சொதப்பிய விராட் கோலி இரண்டு இடங்கள் சரிந்து 14ஆவது இடத்திலும் இருக்கிறார்கள் .

இதேபோன்று வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவும் ஐந்து இடங்கள் முன்னேறி பந்துவீச்சாளர்களுக்கான பட்டியலில் 33வது இடத்தில் இருக்கிறார். வங்கதேச அணியிலும் இரண்டாவது டெஸ்டில் கடைசி இன்னிங்சில் 73 ரன்கள் விளாசிய லிட்டன்தாஸ் இரண்டு இடங்கள் முன்னேறி பேட்டிங் வரிசையில் 12ஆவது இடத்தை பிடித்திருக்கிறார். இதேபோன்று சுழற் பந்துவீச்சாளர் தைஜுல் இஸ்லாம் இரண்டு இடங்கள் முன்னேறி 28ஆவது இடத்தை பிடித்திருக்கிறார்.

ஒரு நாள் போட்டிகளுக்கான தரவரிசையில் விராட் கோலி எட்டாவது இடத்திலும் ,ரோஹித் சர்மா இரண்டு இடங்கள் பின்தங்கி ஒன்பதாம் இடத்திலும் உள்ளனர்.டாப் 10 இடத்தில் இவ்விருவர் மட்டுமே உள்ளனர் . இதேபோன்று பந்துவீச்சாளர்கள் பட்டியலில் இந்திய அணி வீரர்கள் டாப் 10 இடத்தில் ஒருவர் கூட இல்லை .அதிகபட்சமாக பும்ரா 18 வது இடத்தில் இருக்கிறார். 

இதேபோன்று டி20 தரவரிசை பட்டியலில் சூரியகுமார் யாதவ் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறார். அவரை தவிர டாப் 10 வரிசையில் வேற எந்த இந்திய வீரர்களும் இல்லை. பந்துவீச்சாளர்களுக்கான பட்டியலிலும் இந்திய வீரர்கள் டாப் 10 இடத்தில் இல்லை. பந்துவீச்சாளர்கள் பட்டியலில் அதிகபட்சமாக புவனேஸ்வர் குமார் 11ஆவது இடத்தில் இருக்கிறார். 

டி20 போட்டிகளில் ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசையில் ஹர்திக் பாண்டியா மூன்றாவது இடத்தில் நீடிக்கிறார். அணிகளுக்கான தரவரிசை பட்டியலில் டி20 அணியில் இந்தியா முதல் இடத்திலும், ஒரு நாள் பிரிவில் இந்தியா தரவரிசை பட்டியலில் நான்காவது இடத்திலும், டெஸ்ட் போட்டிகளில் இந்தியா தரவரிசையில் இரண்டாவது இடத்திலும் உள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை